

சேலம்,
சேலம் கந்தம்பட்டியில் ரூ.33 கோடியில் கட்டப்பட்ட புதிய நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து முதல்- அமைச்சரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
கூட்டுறவு வங்கிகளில் அந்தந்த வங்கிகளின் நிதி நிலைக்கு ஏற்ப கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் நிறைய பாதிப்பு இருப்பதால் டெபாசிட்தாரர்களின் நிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், பொதுமக்கள் சுயகட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். கடமையை உணர்ந்து அரசு சொல்கிற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மண்டலம் வாரியாக போக்குவரத்து தொடங்கியபோது கிராமப்புறங்களில் இருந்து நிறைய பேர் நகரங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் அவர்கள் திரும்பி சென்றதால், கிராமப்புறங்களில் நோய் தொற்று அதிகரித்தது. அதற்கான தொடர்பை கண்டறிய முடியாததால் தற்போது வருகிற 31-ந் தேதி வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவும் விகிதம் குறைந்த பிறகே பொது போக்குவரத்து தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும். அதேபோல், ஜூலை 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்லமுடியாது. அதாவது, நோய் பரவல் படிப்படியாக குறைந்தால் மட்டுமே அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சை 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அதேசமயம் தேவைக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். உலக சுகாதார நிறுவனம், மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிராம பகுதிகளில் குறிப்பிட்ட சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே கொரோனா தொற்று கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுப்பதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் விதிமுறைகளை பின்பற்றாததால் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களும் நோய் தொற்று ஏற்பட்டு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக கொரோனாவை தடுக்கும் வகையில் அனைத்து பொதுமக்களும் சுயகட்டுப்பாட்டுடன் இருந்து அரசு அறிவிக்கும் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
காவிரி நீரில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்கு குறித்து காவிரி ஒழுங்காற்று குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலனை செய்வதாக அதன் தலைவர் உறுதியளித்துள்ளார். தமிழகத்துக்கான பங்கீட்டை முழுமையாக பெற அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். காவிரி உபரிநீர் திட்டம் என்பது பருவமழை காலங்களில் மேட்டூர் அணை நிரம்பி அதன் உபரிநீர் கடலில் கலக்காதபடி திட்டமிடப்பட்டு சேலம் மாவட்ட ஏரிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
உபரிநீர் மட்டுமே பயன்படுத்தக்கூடும் என்பதால் டெல்டா பாசன விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. மழைக்காலங்களில் கிடைக்கும் உபரிநீரை நீரேற்றும் முறையில் வறண்ட பகுதிகளுக்கு திருப்பும் இந்த திட்டத்தின் மூலம் ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் பாசனத்துக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.