பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் கலெக்டரிடம், விவசாயிகள் கோரிக்கை
Published on

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் கலெக்டர் ஷில்பா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. நெல்லை மாவட்ட விவசாய சங்க துணை செயலாளர் கருப்பசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், பாரத பிரதமர் காப்பீட்டு திட்டம் மூலம் 2017-2018-ம் ஆண்டுக்கு பொது சேவை மையம் மூலம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விவசாயிகள் பிரீமியம் செலுத்தினர். பாதிக்கப்பட்ட சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட உளுந்து, பாசி, நெல் ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் தயார் செய்த பட்டியலில் பல விவசாயிகள் பெயர் விடுபட்டுள்ளது. உழவன் செயலியின் அடிப்படையில் அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

நெல்லை மாவட்டம் காருகுறிச்சி அருகே உள்ள புதுக்குடியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரின் வழியாக கன்னடியன் கால்வாய் செல்கிறது. அதன் நடுவே ஒரு பாலம் உள்ளது. அந்த பாலத்தின் இரு கரைகளும் சேதமடைந்துள்ளது. பாலமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

நெல்லையை அடுத்த நாரணம்மாள்புரம் குறிச்சிகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் கடந்த 26-ந் தேதி தளவாய் மகன் கொம்பையா (வயது 8) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர், மது, கஞ்சா போதையில் இருந்த போது கொலை செய்து இருக்கிறார். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். ஊரைச் சுற்றி பல இடங்களில் சட்ட விரோதமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட சிறுவன் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. அவனது குடும்பத்துக்கு அரசிடம் இருந்து நிதி பெற்று தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com