மாவட்ட விவசாய பணிக்காக 3 அணைகளில் 1,500 கனஅடி தண்ணீர் திறப்பு: கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்ட விவசாய பணிக்காக பாபநாசம் உள்ளிட்ட 3 அணைகளில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட விவசாய பணிக்காக 3 அணைகளில் 1,500 கனஅடி தண்ணீர் திறப்பு: கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாய பணிக்காக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சுமார் 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 20 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) ஸ்ரீவைகுண்டம் அணைக்கு வந்து சேரும். அந்த தண்ணீர் தேவைக்கு ஏற்ப மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய 4 கால்வாய்களிலும் வாழைப்பயிருக்காக பிரித்து வழங்கப்படும்.

மத்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. அதன்படி 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகளை இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. வருகிற 31-ந் தேதிக்குள் 10 சதவீதம் விவசாயிகளை ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதே போன்று அனைத்து இ சேவை மையங்களிலும் விவசாயிகள் பதிவு செய்யலாம். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பிய விவசாயிகள் பிரிமியமாக மாதம் ரூ.55-ம், அதிகபட்சமாக 40 வயது நிரம்பிய விவசாயிகள் மாதம் ரூ.200-ம் பிரிமியம் செலுத்த வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 37 குளங்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகின்றன. இதில் 30 பணிகள் 50 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்து உள்ளன. மற்ற பணிகளையும் விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com