தொழில் முனைவோருக்கு கடன் உதவி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்

தென்காசி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்.
தொழில் முனைவோருக்கு கடன் உதவி கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார்
Published on

தென்காசி,

தமிழக அரசு உலக வங்கி நிதியுதவிடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல், வருமானத்தை பெருக்குதல் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தென்காசி மாவட்டத்தில் கடையம் மற்றும் கீழப்பாவூர் ஆகிய 2 வட்டாரங்களை சார்ந்த 44 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் தொழில் களை இழந்த மற்றும் முதலீடு செய்ய நிதி தேவைப்படும் சிறு தொழில் முனைவோர்களை மீண்டும் தொழில் செய்ய மற்றும் நலிவடைந்த தொழில் களை மேம்படுத்தவும், வருமானம் ஈட்டவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இச்சிறப்பு நிதிஉதவித் தொகுப்பு உதவி செய்கிறது.

கொரோனா காலகட்டங்களில் உற்பத்தியாளர் குழுக்கள், தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டும் ஒரு உற்பத்தியாளர் குழுவிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் மானியமாக தென்காசி மாவட்டத்தை சார்ந்த 18 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.27 லட்சம் மானியமாக நேற்று வழங்கப்பட்டது.

மேலும் முக கவசம் தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், இனிப்பு வகைகள் உற்பத்தி, மண்பாண்ட உற்பத்தி, கருப்புக்கட்டி தயாரித்தல் போன்ற மதிப்பு கூட்டிய தொழில்களை மேம்படுத்தும் பொருட்டு ஒரு தொழில் குழுவிற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மானியமாக, தென்காசி மாவட்டத்தில் 4 தொழில் குழுக்களுக்கு ரூ.6 லட்சத்தையும், உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ.33 லட்சத்தையும் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சரவணன், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், செயல் அலுவலர்கள் மற்றும் திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com