வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கும் எடியூரப்பா நம்பிக்கை

வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக எடியூரப்பா கூறினார்.
வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்கும் எடியூரப்பா நம்பிக்கை
Published on

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா புதிய தலைவராக நளின்குமார் கட்டீல் பதவி ஏற்கும் விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, பா.ஜனதா கொடியை புதிய தலைவரான நளின்குமார் கட்டீலிடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதையடுத்து அவர் பேசியதாவது:-

அடுத்த சட்டசபை தேர்தல் நமக்கு(பா.ஜனதாவினருக்கு) மிக முக்கியமானது. 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மண்டியா தொகுதியில் நமது கட்சி ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் சுமலதா வெற்றி பெற்றார்.

காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சி கூட்டணி, ஆட்சியில் இருந்தபோதே இந்த அளவுக்கு நமது கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றால், இது மிகப்பெரிய சாதனை ஆகும். மற்ற கட்சிகளை விட பா.ஜனதா, அமைப்பு ரீதியாக பலமாக உள்ளது. அதனால் நீங்கள் (நளின்குமார் கட்டீல்) இன்னும் உழைத்து கட்சியை பலப்படுத்துங்கள்.

உங்களுடன் கைகோர்க்க தொண்டர் படை தயாராக உள்ளது. நீங்கள் கட்சியை கட்டமைத்து இந்த நிலைக்கு வந்துள்ளர்கள். கேரளாவில் கட்சியை வளர்க்க நீங்கள் எவ்வாறு உழைத்தீர்கள் என்பது நமது கட்சி மேலிட தலைவர்களுக்கு புரிந்துள்ளது. அதனால் தான் உங்களுக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கட்சியை வளர்க்கும் பணியில் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். நிர்வாகிகள், தொண்டர்களின் நம்பிக்கையை பெற்று செயலாற்ற வேண்டும். கர்நாடகத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் உண்டாகியுள்ளது. நான் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து நிவாரண பணிகளை முடுக்கிவிட்டுள்ளேன்.

உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கர்நாடகம் வந்து வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு சென்றனர். தற்போது வெள்ள சேதங்களை மதிப்பிட மத்திய குழு வந்துள்ளது. அதனால் வெள்ள பாதிப்புகளுக்கு நிதி உதவியை மத்திய அரசு அதிகமாக வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் உறுதி எடுத்தனர்.

அதன் அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் படுதோல்வி அடைந்தது. மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி உள்ளது. கட்சியை பலப்படுத்த நான் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறோம். நீங்கள் கட்சியை பலப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com