அரசு திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு 15 நாட்களில் உரிய இழப்பீடு - மாவட்ட நீதிபதி

அரசு திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு 15 நாட்களில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசு திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு 15 நாட்களில் உரிய இழப்பீடு - மாவட்ட நீதிபதி
Published on

திருவண்ணாமலை,

அரசு திட்டங்களுக்காக நிலம் வழங்கியவர்களுக்கு 15 நாட்களில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி மகிழேந்தி கூறினார்.

திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டில் நேற்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி சுமதி சாய்ப்பிரியா முன்னிலை வகித்தார். சார்பு நீதிபதி ராஜ்மோகன் வரவேற்றார்.

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, குற்றவியல் வழக்கு, சிவில் வழக்கு, வங்கி தொடர்பான வழக்குகள் என மொத்தம் 3,600 வழக்குகள் எடுக்கப்பட்டு, 2,350 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 கோடி வரை இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி மகிழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டன. மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. பல ஆண்டுகள் ஆகியும் நிலம் வழங்கியவர்களுக்கு முழு தொகையும் போய் சேரவில்லை என்று மக்கள் நீதிமன்றத்தில் நிலம் வழங்கியவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து உரிய துறையை சார்ந்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சமரசம் பேசப்பட்டது. இதில் 15 நாட்களுக்குள் சம்பந்தபட்ட 260 பேருக்கு முழு தொகையையும் வழங்குவதாக உறுதி அளித்து சென்று உள்ளனர். தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com