பராமரிப்பு பணிக்காக 31 ரெயில்கள் ரத்து: மின்சார ரெயில்கள் இயங்காததால் பயணிகள் தவிப்பு

பராமரிப்பு பணிக்காக 31 மின்சார ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டதால், ரெயில் நிலையங்களில் பயணிகள் தவித்தனர். எக்ஸ்பிரஸ் பாதையில் ஓடிய குறைந்த அளவு ரெயில்களிலும் கூட்டம் அலைமோதியது.
பராமரிப்பு பணிக்காக 31 ரெயில்கள் ரத்து: மின்சார ரெயில்கள் இயங்காததால் பயணிகள் தவிப்பு
Published on

சென்னை,

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் ஆகிய இடங்களுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடற்கரை செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது.

இந்த குறிப்பிட்ட நேரத்தில் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் 16 மின்சார ரெயில்களும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இயக்கப்படும் 15 மின்சார ரெயில்களும் என மொத்தம் 31 மின்சார ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. விடுமுறை நாளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால், பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று ரெயில்வே நிர்வாகம் கருதியது.

ஆனால், நிலைமை தலைகீழாக அமைந்துவிட்டது. நேற்று காலை முதலே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதற்கான தாக்கம் தெரியத் தொடங்கியது. வெளியூர்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று காலை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இருந்து இறங்கிய பெரும்பாலான பயணிகள், நகரின் பிற பகுதிகளுக்கு மின்சார ரெயில் களில் செல்லும் எண்ணத்தில் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பிளாட்பாரத்திற்கு வந்தனர். அப்போது, ரெயில்கள் இயக் கப்படாத தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நேரம் செல்லச்செல்ல எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது. நடைமேம்பாலங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால், அப்பகுதியை கடந்து செல்ல முயன்ற பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். அதே நேரத்தில், நகரின் பிற பகுதிகளில் இருந்து மின்சார ரெயில்களில் செல்வதற்காக ஆங்காங்கே உள்ள ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகளும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை கேள்விப்பட்டு அதிருப்தி அடைந்தனர்.

இதற்கிடையே, காலை 10.30 மணிக்கு பிறகு குறிப்பிட்ட சில மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் பாதையில் ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்பட்டன. இதனால், அந்த ரெயில்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பயணிகள் ரெயில்களில் தொங்கிக் கொண்டு செல்வதை காண முடிந்தது. இந்த ரெயில்களிலும் வழியில் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டு, தாமதமாகவே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

தற்போது, ஆடிக் கழிவு ஜவுளி விற்பனை வேறு தொடங்கியிருப்பதால், நேற்று பெரும்பாலானவர்கள் தியாகராயநகர் ரெங்கநாதன் தெருவுக்கு ஜவுளி வாங்க குடும்பத்துடன் புறப்பட்டனர். ஆனால், மின்சார ரெயில்கள் இயங்காததால், தவிப்புக்கு உள்ளானார்கள். பலர், பஸ்களில் பயணம் மேற்கொண்டனர். மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் சிலர், எழும்பூரில் இருந்து மெட்ரோ ரெயில்களில் சென்றதையும் காண முடிந்தது.

இதேபோல், மூர்மார்க்கெட் திருவள்ளூர், கடற்கரை வேளச்சேரி வழித்தடத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால், அங்கும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால், அந்த வழியாக செல்ல முயன்ற பயணிகளும் கடும் அவதி அடைந்தனர். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சென்டிரல் வந்து இறங்கிய பயணிகள், நகரின் பிற பகுதிகளுக்கு செல்வதற்காக, எதிரேயுள்ள பூங்கா ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில்கள் இயங்காததால், அங்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் ரெயிலுக்காக காத்திருந்ததை காண முடிந்தது.

எக்ஸ்பிரஸ் பாதையில் சில மின்சார ரெயில்கள் நேற்று இயக்கப்பட்டதால், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் செங்கல்பட்டு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரெயில்கள் 1 மணி நேரம் தாமதமாக எழும்பூர் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் சிலர் கூறும்போது, ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம்தான். அதற்காக, இப்படி அதிக அளவு மின்சார ரெயில்களை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தினமும் நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 4 மணி வரை மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதில்லை. அந்த நேரத்தில் பகுதி பகுதியாக இந்த பராமரிப்பு பணியை மேற்கொண்டால் என்ன? என்று ஆவேசமாக கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com