சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
Published on

சேலம்,

நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த மோட்டார் வாகன சட்டத்தை திருத்தி அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறல்களுக்கான பன்மடங்கு அபராதம் விதிக்கும் முறை நேற்று முதல் அமலுக்கு வந்தது.

அதாவது, இந்த புதிய சட்டத்தின்படி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதம் ரூ.100-ல் இருந்து ரூ.1000 என அதிகரிக்கப்பட்டுள்ளது. செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும், சிறுவர்கள் வாகனம் ஓட்ட அனுமதித்தால் ரூ.25 ஆயிரமும், அதிக பாரம் ஏற்றி சென்றால் ரூ.20 ஆயிரமும் என அபராதம் விதிக்கப்படுகிறது.

அதன்படி சேலம் மாவட்டத்திலும் நேற்று ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் மாநகரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அழகாபுரம் உள்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்தனர். ஆனால் தமிழகத்தில் புதிய அபராதம் தொடர்பான இ-சலான், போக்குவரத்து போலீசாரின் கணினியில் அப்டேட் ஆகவில்லை. சர்வர் பிரச்சினையால் சேலத்தில் புதிய அபராத தொகையை வசூலிக்க முடியாமல் போலீசார் தவித்தனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு புதிய தொகை ரூ.1,000 விதிக்காமல் ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சர்வர் பிரச்சினையை சரி செய்யும் பணியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு புதிய அபராத தொகை வசூலிக்காமல் பழைய தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டது. அதேசமயம், புதிய போக்குவரத்து விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பெரும்பாலான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து சென்றதை காணமுடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com