மண்டியாவில், 35 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு 5 ரூபாயில் சிகிச்சை அளித்து வரும் ‘மெர்சல்’ டாக்டர்

மண்டியாவில், 35 ஆண்டுகளாக நோயாளிகளிடம் 5 ரூபாய் மட்டும் வசூலித்து உண்மையான ‘மெர்சல்‘ டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்து வருகிறார்.
மண்டியாவில், 35 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு 5 ரூபாயில் சிகிச்சை அளித்து வரும் ‘மெர்சல்’ டாக்டர்
Published on

மண்டியா,

மண்டியாவில், 35 ஆண்டுகளாக நோயாளிகளிடம் 5 ரூபாய் மட்டும் வசூலித்து உண்மையான மெர்சல் டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்து வருகிறார்.

மருத்துவம் இன்று உலகளவில் மிகப்பெரிய வியாபாரமாக மாறி வருகிறது. அதற்கேற்ப பல்வேறு பகுதிகளில் புதிது, புதிதாக பல மருத்துவமனைகள் முளைத்து வருகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் மருத்துவத்தை சமூக சேவையாக செய்ய வேண்டும் என்பது வெறும் வார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. ஏராளமான டாக்டர்கள், சமூக சேவையை மறந்து, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், இன்றளவும் ஒரு சில டாக்டர்கள் சமூக சேவை உணர்வுடன் செயல்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வருகிறார்கள்.

சமீபத்தில் தமிழில் வெளியான மெர்சல் படத்தில் நடிகர் விஜய் டாக்டர் கதாபாத்திரத்தில் வருவார். அதில், அவர் நோயாளிகளிடம் வெறும் 5 ரூபாய் மட்டுமே வசூலித்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார். அதேபோன்று, கர்நாடக மாநிலம் மண்டியாவில் உண்மையான மெர்சல் டாக்டர் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளாக மனித நேயத்துடனும், சமூக சேவை உணர்வுடனும் நோயாளிகளிடம் 5 ரூபாய் மட்டும் வசூலித்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். அதுபற்றிய விவரம் பின்வருமாறு:

மண்டியா தாலுகா சிவனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.என்.சங்கரேகவுடா. இவர் மணிப்பாலில் கஸ்தூர்பா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்தார். அதன்பின்னர் சங்கரேகவுடா, வெனெரோலஜி மற்றும் டெர்மட்டோலஜி டிப்ளமோ படிப்பையும் நிறைவு செய்துள்ளார். இவருக்கு திருமணமாகி ருக்மினி என்ற மனைவி உள்ளார். டாக்டர் சங்கரேகவுடா கடந்த 35 ஆண்டுகளாக மண்டியா டவுன் சஞ்சய் தியேட்டர் அருகே தாரா என்ற பெயரில் கிளினிக் வைத்துள்ளார். அந்தப்பகுதியில் மிகவும் பிரபலமாக இந்த கிளினிக் உள்ளது. இவர் நோயாளிகளிடம் சிகிச்சைக்காக வெறும் 5 ரூபாய் மட்டுமே வசூலித்து வருகிறார்.

மண்டியாவில் பிரபலமாக இருக்கும் அவரை அனைவரும் 5 ரூபாய் டாக்டர் என்றே அழைக்கிறார்கள். தோல் மற்றும் பாலியல் பிரச்சினை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். நோயாளிகளை அன்பாக கவனித்து, சிகிச்சை அளித்து வரும் இவருடைய கிளினிக்கிற்கு தினமும் சுமார் 300 பேருக்கும் அதிகமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

கிராமத்தில் இருந்து இவருடைய கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு சங்கரேகவுடா இலவசமாக சிகிச்சை அளிக்கிறார். இதுதவிர அவர் கிராமங்களுக்கு சென்று சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறார். தோல், பாலியல் பிரச்சினை சார்ந்த நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க குறைந்தபட்சம் ரூ.100, அதிகபட்சமாக ரூ.1,000 வரை வசூலிக்கும் டாக்டர்களுக்கு மத்தியில், டாக்டர் சங்கரேகவுடா கடந்த 35 ஆண்டுகளாக வெறும் 5 ரூபாய் மட்டுமே வசூலித்து வருகிறார். இவர் பரிந்துரை செய்யும் மருந்துகளின் விலையும் குறைவாக தான் உள்ளது.

நகரில் பல்வேறு டாக்டர்கள், மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்க கட்டணத்தை உயர்த்தினாலும், இவர் 5 ரூபாயில் இருந்து தனது கட்டணத்தை உயர்த்தவில்லை. கடந்த 35 ஆண்டுகளாக இவருக்கு பல்வேறு பெரிய, பெரிய மருத்துவமனைகளில் இருந்து அழைப்பு வந்தாலும், அவை அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு தொடர்ந்து சமூக சேவையை ஆற்றி வருகிறார்.

பெரிய, பெரிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் கூட தற்போது டாக்டர் சங்கரேகவுடாவை தேடி வருகிறார்கள். கைராசியான டாக்டர் என்று பெயர் எடுத்துள்ள இவரிடம் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற தொலை தூரங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இவருடைய கிளினிக்கில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெண்கள் யாராவது வந்தால் அவர்களுக்கு தான் முதலில் சிகிச்சை அளிப்பார். மிகவும் எளிமையாக இருக்கும் டாக்டர் சங்கரேகவுடா, தொலைபேசி (லேண்ட்லைன்), செல்போன், கம்ப்யூட்டர் எதையும் பயன்படுத்தவில்லை. அவர் தனக்கு உதவியாளர் கூட வைத்துக்கொள்ளவில்லை.

இவர் மருத்துவத்தை சமூக சேவை உணர்வுடன் செய்து வருவதற்கு அவருடைய மனைவி ருக்மினியும் உந்துகோலாக இருக்கிறார். டாக்டர் சங்கரேகவுடா, தனக்கு சொந்தமான சிறிது நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். மனித நேயம் மற்றும் சமூக சேவை உணர்வுடன் செயல்பட்டு வரும் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றால் மிகையல்ல.

5 ரூபாய்க்கு சிகிச்சை அளிப்பது குறித்து டாக்டர் சங்கரேகவுடா கூறுகையில், நான் பேராசை பிடித்தவன் அல்ல. இதனால் நான் அதிக கட்டணம் வசூலிக்க நினைத்ததில்லை. எனது கிளினிக்கிற்கு வருபவர்கள் ஏழையோ? பணக்காரர்களோ? என்பது எனக்கு முக்கியமில்லை. யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிப்பது தான் எனது நோக்கம் என்றார்.

டாக்டர் சங்கரேகவுடாவின் மனைவி ருக்மினி கூறுகையில், நாங்கள் பணத்தின் மீது பேராசை பிடித்தவர்கள் அல்ல. எங்களுக்கு வணிக மூளையும் கிடையாது. எளிமையான வாழ்க்கை முறைக்கு ஒரு நோயாளியிடம் 5 ரூபாய் வசூலிப்பது போதுமானது தான். இதனால் நாங்கள் தொடர்ந்து சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com