முன்னாள் மந்திரியிடம் ரூ.30 கோடி பறிக்க முயன்ற வழக்கு: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த டாக்டருக்கு ஜாமீன் சிறப்பு கோர்ட்டு உத்தரவு

முன்னாள் மந்திரியிடம் ரூ.30 கோடி பறிக்க முயன்ற வழக்கில் கைதான டாக்டர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து சிறப்பு கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
முன்னாள் மந்திரியிடம் ரூ.30 கோடி பறிக்க முயன்ற வழக்கு: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்த டாக்டருக்கு ஜாமீன் சிறப்பு கோர்ட்டு உத்தரவு
Published on

மும்பை,

புனே மாவட்டம் ஷிரூரை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் இந்திரகுமார் பிசே(வயது52). இவர் முன்னாள் மந்திரி மகாதேவ் ஜான்கரிடம் ரூ.30 கோடி பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது மராட்டிய திட்டமிடப்பட்ட குற்ற தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள டாக்டர் இந்திரகுமார் பிசே தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி ஏ.என்.சிர்சிகார் முன்னிலையில் நடந்தது.

அப்போது டாக்டர் இந்திரகுமார் பிசே தனக்கு ஜாமீன் அளித்தால் புனேயில் உள்ள அரசு சசூன் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு 60 நாட்கள் தற்காலிக ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் நீதிபதி தனது உத்தரவில் கூறியதாவது:-

குற்றம் சாட்டப்பட்டவரின் கூற்றுப்படி, அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மகப்பேறு மருத்துவர். அவரது சேவையை பொதுசுகாதார அமைப்பு பயன்படுத்தி கொள்ள முடியும். சமூகத்தின் பெரிய நலனுக்காக சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவருக்கு தற்காலிக ஜாமீன் வழங்க வேண்டியது அவசியம் என நான் நினைக்கிறேன்.

டாக்டர் இந்திரகுமார் பிசே, வாரத்தில் 5 முறை மருத்துவ சேவை வழங்க வேண்டும். ஜாமீனில் இருக்கும் போது அவர் அரசு தரப்பு சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது.

ஜாமீன் முடிந்து திரும்பும் நேரத்தில் சிகிச்சை அளித்ததற்காக சசூன் ஆஸ்பத்திரி டீனிடம் இருந்து சான்றிதழை பெற வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com