பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவச வைபை வசதி

வள்ளியூர் பஸ்நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவச வைபை வசதியை கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவச வைபை வசதி
Published on

வள்ளியூர்,

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பஸ்நிலையத்தில் இலவச வைபை (இணையதள சேவை) வசதி நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டுள்ளது. இன்பதுரை எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கலெக்டர் சந்தீப் நந்தூரி கலந்து கொண்டு இலவச வைபை வசதியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வள்ளியூர் பஸ்நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இலவச வைபை (இணையதள சேவை) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையை பயன்படுத்தி, மாணவ- மாணவிகள் தங்களுக்கு தேவையான இணையதள புத்தகங்கள் மற்றும் விவசாய பெருமக்கள் தங்களுக்கு தேவையான வேளாண்மை குறித்த தகவல்களை இணையதளம் மற்றும் வழிகாட்டுதல் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த இணையதள சேவையை சுமார் 300 மீட்டர் சுற்று பரப்பளவில் பயன்படுத்த முடியும். ஒரே நேரத்தில் 500 நபர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பஸ்நிலையத்தில், இணையதள சேவையினை எவ்வாறு பயன்படுத்துவது என்று பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், எல்இடி திரைகள் மூலம் செயல்முறைகள் திரையிட்டு காண்பிக்கப்படும். இச்சேவை பயன்பாட்டினை கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ்நிலையங்களிலும் இலவச வைபை சேவை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகானந்தம், அந்தோணி அமலராஜா, நகர செயலாளர் தவசிமுத்து, நகர பஞ்சாயத்து அலுவலக கண்காணிப்பாளர் ராஜேசுவரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com