தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
தூய்மை காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும்; மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

ஈரோடு மாவட்ட தூய்மை காவலர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் கதிரவனிடம் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் 1,960 தூய்மை காவலர்கள் பணியாற்றி வருகிறோம். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, உடலுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் சூழலில் நாங்கள் தற்போது பணிபுரிந்து வருகிறோம். மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரிவோருக்கு அதிகமாகவும், கிராம ஊராட்சிகளில் பணிபுரிவோருக்கு குறைவாகவும் ஊதியம் வழங்கப்படுகிறது. நகராட்சிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.390-ம், கிராம ஊராட்சிகளில் ரூ.86-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த முரண்பாட்டை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை தரம்பிரிக்க வாங்கப்பட்ட தொட்டிகள் உடைந்துவிட்டன. குப்பைகளை கொண்டு செல்வதற்கான தள்ளு வண்டிகளும் சேதமடைந்துவிட்டன. இவற்றை சீரமைத்துக்கொடுக்க வேண்டும். அனைத்து தூய்மை காவலர்களுக்கும் பாதுகாப்பு உபகரணம் வழங்க வேண்டும். மாதம்தோறும் 10-ந் தேதிக்குள் ஊதியம் கிடைக்க வழிவகை செய்யவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

தமிழ்நாடு சலவை தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சலவை தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் சரிவர கிடைப்பதில்லை. எனவே தாலுகா வாரியாக சலவைத்துறை அமைத்து கொடுக்க வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் சலவை பெட்டிகள் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சித்தோடு நல்லாகவுண்டபாளையம் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்திருந்த மனுவில், எங்கள் பகுதியில் 300 குடும்பத்தினர் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம். தற்போது எங்கள் குடிசைகளை அகற்றக்கோரி அதிகாரிகள் மிரட்டி வருகிறார்கள். எனவே தொடர்ந்து நாங்கள் அந்த பகுதியில் வசிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

சத்தியமங்கலம் குமரன் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்திருந்த மனுவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குமரன் நகர் பகுதியில் அரசு சார்பில் 69 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. தற்போது அந்த பகுதியில் நாங்கள் வீடு கட்ட முடிவுசெய்து பணிகளை தொடங்கி உள்ளோம். இந்த நிலையில் வீடு கட்ட விடாமல் எங்களை சிலர் தடுத்து வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

ஈரோடு ரங்கம்பாளையம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மல்லிகா (வயது 55) என்பவர் கொடுத்திருந்த மனுவில், கடந்த 1988-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் எனக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இந்த வீட்டு மனைக்கான முழு தொகையும் நான் செலுத்தி விட்டேன். ஆனால் அந்த இடத்துக்கான பத்திரம் எனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அந்த இடத்தில் வீடு கட்டுதல், விரிவாக்கம் செய்தல், கடன் பெறுதல் போன்ற எந்த பணிகளையும் என்னால் செய்ய முடியவில்லை. எனவே எனக்கு ஒதுக்கீடு செய்த இடத்திற்கான கிரைய பத்திரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று கூறு இருந்தார்.

ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவிகள் கொடுத்திருந்த மனுவில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இன்டர்நேசனல் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த கல்வி நிறுவனத்தின் ஈரோடு கிளையில் நாங்கள் தலா ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி படித்து வந்தோம். அப்போது எங்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நாங்கள் படித்து வந்த கல்வி நிறுவனத்தின் அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் போலியாக செயல்பட்டதால் எங்களால் மேற்கொண்டு படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நாங்கள் செலுத்திய கட்டணத்தையும் திருப்பி தரமறுக்கிறார்கள். எனவே அந்த கல்வி நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தலையநல்லூர் பொன்காளியம்மன் குடிப்பாட்டு வேட்டுவக்கவுண்டர்கள் நல அறக்கட்டளை சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், எங்கள் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருப்பூர் 2-வது கிளையில் டிரைவராக பணியாற்றி வரும் ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், எங்கள் கிளையில் பணியாற்றும் அதிகாரிகள், எனக்கு உரிய பணி வழங்காமல் விடுப்பு கொடுத்து ஊதிய இழப்பை ஏற்படுத்துகிறார்கள். தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதேபோல் மொத்தம் 390 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டரின் விரும்ப கொடை நிதியில் இருந்து 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரத்து 565 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரங்களும், தொழு நோயால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.1,000 பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com