சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக இலவச அரிசி - அமைச்சர் கந்தசாமி வழங்கினார்

சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக இலவச அரிசி வழங்குவதை அமைச்சர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக இலவச அரிசி - அமைச்சர் கந்தசாமி வழங்கினார்
Published on

பாகூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு 15 கிலோ அரிசி மற்றும் 3 கிலோ பருப்பு வழங்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி புதுவையில் உள்ள சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

அரிசி 15, 30 கிலோ பைகளிலும், பருப்பு 3 கிலோ என்ற அளவிலும் 3 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது. அரிசி, பருப்பு வகைகள் மொத்தமாக குடிமைப்பொருள் வழங்கல் துறை மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அவரவர் குடியிருப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது.

சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு, வீடாக அரிசி, பருப்பு வழங்க தாசில்தார், துணை தாசில்தார் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. எந்த பகுதியில் வழங்கப்படுகிறதோ அந்த பகுதியில் முன்னதாக மாவட்ட நிர்வாகம் மூலம் அறிவிக்கப்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கூட்டம் கூடாதபடி அரிசி, பருப்பு வழங்கப்படும்.

புதுவையில் இதன் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரம் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள்.

முதல் கட்டமாக நேற்று அரிசி மட்டும் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர் குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு 5 கிலோ என 3 மாதத்திற்கான அரிசியை ஏம்பலம் தொகுதி சேலியமேடு சின்னபேட், அரங்கனூர், நெட்டப்பாக்கம் தொகுதி பனையடிக்குப்பம் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது. அமைச்சர் கந்தசாமி இதனை வழங்கி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி போக்குவரத்து கழக பஸ்களில் தலா 100 குடும்பத்திற்கு என ஏற்றி வந்து அந்த பகுதியில் சமூக இடைவெளியில் பொதுமக்களை நிற்க செய்து அரிசி பைகளை மட்டும் அமைச்சர் கந்தசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.பருப்பு 3 கிலோ வரும் 20-ந் தேதிக்கு பிறகு வழங்கப்படும் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

இந்த பணியில் வருவாய்த்துறை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். அரங்கனூர் பகுதியில் மஞ்சள் நிற ரேஷன்கார்டு உள்ளவர்களும் ஏழைகளாக பலர் உள்ளோம். ஆனால் சிவப்பு நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்குவது நியாயம் இல்லை. எங்களுக்கும் வழங்க வேண்டும் என அமைச்சரிடம் அப்பகுதி மக்கள் ஆவேசமாக பேசினர். பாகூர் தொகுதி கடுவனூர் பகுதியில் தனவேலு எம்.எல்.ஏ. வழங்கினார். தொடர்ந்து மற்ற பகுதியிலும் வழங்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com