திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு, பல மாதங்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு பல மாதங்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு, பல மாதங்களாக தேங்கி நிற்கும் மழைநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர்-மதுரை சாலையில் செம்மொழி பூங்கா அருகில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வந்து பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர திருப்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் நடக்கும் விபத்துகளில் சிக்குவோருக்கு இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தவிர அவசரகால சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை, காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு தனி சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இங்கு தரமான அளவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதையடுத்து இந்த மருத்துவமனை முன்பு வாய்க்கால் வசதி இல்லாததாலும், ஏற்கனவே இருந்த வாய்க்கால் வசதி முற்றிலும் ஆக்கிரமித்து போனதால் தற்போது மருத்துவமனை முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி பல மாதங்களாக நிற்கிறது.

இதனால் இந்த மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மருத்துவமனையிலே சுகாதார கேடு ஏற்படும் நிலை இருந்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், முதியோர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர்களுக்கு வர வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:- பொதுவாக காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும், விபத்துக்கால சிகிச்சைகளுக்கும் அரசு மருத்துவமனையை நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகஅளவில் பயன்படுத்தி வருகின்றனர். மருத்துவமனை என்பது சுகாதாரமாக இருப்பதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

இதுதவிர சுகாதாரத்தை பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்தி தமிழக அரசு செலவு செய்து வருகிறது. ஆனால் இந்த அரசு மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்கி பல மாதங்களாக அப்படியே நிற்பதால் பல்வேறு வகையான கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனை அருகில் செம்மொழி பூங்கா மற்றும் தற்காலிக பழைய பஸ் நிலையம் மற்றும் எதிரே நீதிபதி குடியிருப்பு வீடு உள்ளது. இது தவிர அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து சுகாதாரமற்ற நிலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர்களுக்கும் பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனை முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com