கடைகளுக்கு பூட்டு போட்டதற்கு எதிர்ப்பு: பேட்டையில் போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகை

நெல்லை பேட்டையில் கடைகளுக்கு பூட்டு போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகளுக்கு பூட்டு போட்டதற்கு எதிர்ப்பு: பேட்டையில் போலீஸ் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகை
Published on

பேட்டை,

நெல்லை பேட்டை செக்கடி பஸ்நிறுத்தம் அருகில் நவாப் வாலாஜா பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் 40-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இதில் ஏராளமான வியாபாரிகள் கடை நடத்தி வருகிறார்கள். அவர்களில் சில வியாபாரிகள் வாடகை செலுத்தவில்லை என்று பள்ளிவாசல் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அந்த வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தி வருவதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் வக்பு வாரிய அலுவலக கண்காணிப்பாளர் தாரிக், ஆய்வாளர்கள் செய்து ஆலம் இப்ராகிம், நிஜாம், முகமது முஸ்தபா மற்றும் நிர்வாகிகள் அங்கு வந்து, சேரன்மாதேவி ரோட்டில் உள்ள அந்த 7 கடைகளுக்கு பூட்டு போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையை நடத்துகின்றவர்கள் அங்கு வந்து அந்த பூட்டை உடைத்துவிட்டு, தங்களது பூட்டை போட்டு பூட்டினார்கள். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வக்பு வாரிய அதிகாரிகள், தங்களுக்கு வாடகை பணத்தை தராததால் கடைகளுக்கு பூட்டு போட்டு உள்ளோம் என்றனர். அதற்கு கடை வியாபாரிகள், நாங்கள் பள்ளிவாசலுக்கு தபால் நிலையம் மூலம் வாடகை பணத்தை செலுத்தி, அதற்கான ரசீது எங்களிடம் உள்ளது. மாநகராட்சிக்கு வரி, மின்கட்டணம் செலுத்தி வருகிறோம் என்று கூறினர். அதை ஏற்க வக்பு வாரிய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதையடுத்து வியாபாரிகள் அந்த பகுதியில் உள்ள கடைகளை அடைத்தனர். பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, நீங்கள் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com