சிறு, குறு தொழில்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் தொகை 30 சதவீத மானியத்துடன் வழங்க வேண்டும்

சிறு, குறு தொழில்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் தொகையை 30 சதவீத மானியத்துடன் வழங்க வேண்டும் என்று மேற்கு மண்டலத்தில் உள்ள 8 தொகுதிகளின் எம்.பி.க்கள் கூட்டாக பேட்டி அளித்தனர்.
சிறு, குறு தொழில்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் தொகை 30 சதவீத மானியத்துடன் வழங்க வேண்டும்
Published on

ஈரோடு,

தமிழகத்தின் மேற்கு மண்டலமாக விளங்கும் கோவை மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, கரூர், திண்டுக்கல், சேலம், நாமக்கல் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு அ.கணேசமூர்த்தி எம்.பி. (ஈரோடு) தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்), பி.ஆர்.நடராஜன் (கோவை), எஸ்.சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), ஜோதிமணி (கரூர்), வேலுச்சாமி (திண்டுக்கல்), எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), ஏ.கே.சின்ராஜ் (நாமக்கல்) ஆகியோர் கலந்து கொண்டனர். மொத்தம் 8 நாடாளுமன்ற தொகுதிகளின் எம்.பி.க்கள் இந்த மேற்கு மண்டல எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் எம்.பி.க்கள் 8 பேரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி என்பது மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு அந்தந்த தொகுதிகளின் அத்தியாவசிய தேவையை தீர்க்கும் நிதியாகும். எனவே இந்த நிதியை நிறுத்தக்கூடாது என்று எம்.பி.க்களை திரட்டி கோரிக்கை வைக்கப்படும்.

தமிழகத்தின் கொரோனா மரணங்கள் குறித்து வெளிப்படைத்தன்மையாக அரசு அறிவிக்கவில்லை. உதாரணமாக சென்னை மாநகராட்சியில் கொரோனாவில் இறந்தவர்கள் குறித்த பட்டியலில் இருக்கும் எண்ணிக்கை, மாநில அரசு வழங்கும் பட்டியலில் இருப்பதில்லை. 2 பட்டியலுக்கும் வேறுபாடு இருக்கிறது. இதுவே அரசு மரணங்களை மறைக்கிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. அதுமட்டுமின்றி சென்னையில் கொரோனா சமூகப்பரவலாகி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை முழுமையான திருப்தி இல்லாததாக உள்ளது.

அரசு திட்டங்களுக்காக மத்திய-மாநில அரசுகள் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை பின்பற்றாமல், 1885-ம் ஆண்டு ஆங்கிலேயர் கால சட்டத்தை பின்பற்றுகிறார்கள். இது தவறு. மேலும், உயர்மின் கோபுரங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது, கோவை மாவட்டத்தில் மட்டும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. அதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் வழங்க வேண்டும்.

மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்கள் தொழில்துறையில் மேம்பட்ட மாவட்டங்களாகும். இங்கிருந்து வரியாகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலமாகவும் அரசுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் மேற்கு மண்டல மாவட்டங்களில் தொழில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. தற்போது கொரோனாவால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே மேற்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில்கள் மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடியை 30 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு எம்.பி.க்கள் கூறினார்கள்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

* நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை நிறுத்தி வைப்பதை கண்டிப்பதுடன், இந்த முடிவை திரும்பப்பெற வலியுறுத்தல்.

* சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்.

* கொரோனா தடுப்பு பரிசோதனைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

* மாநில அரசுகளின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது.

* விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கோவை மாவட்ட வழிகாட்டுதல் முறையை பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் இழப்பீடு வழங்க வேண்டும்.

* அரசின் திட்டங்கள் தொடக்க விழா, ஆய்வுக்கூட்டங்களில் எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் அனுப்பாத கலெக்டர்கள் மீது நாடாளுமன்ற சலுகைக்குழுவில் புகார் தெரிவிப்பது.

* தமிழக அரசின் திட்டப்பணிகளில் குறைகள் இருப்பதை சுட்டிக்காட்டிய நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யை அநாகரிகமாக நடத்தி, அவரை தாக்க முயன்ற எம்.எல்.வு.க்கு கண்டனம் தெரிவிப்பது.

* கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு வருமானம், வேலை இழந்து வாடும் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.7 ஆயிரத்து 500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

* கரூர் தொகுதி எம்.பி.யான ஜோதிமணி கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அநாகரிகமாக நடந்து கொண்ட பா.ஜனதா கட்சி மாநில நிர்வாகியை கண்டிப்பது. கொரோனா ஊரடங்கு காலத்திலும் எதிர்க்கட்சியினர், ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யும் அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com