ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு
Published on

திருவையாறு,

தஞ்சாவூர் மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒருபகுதியாக குடிநீர் வழங்குவதற்காக திருவையாறு அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற தொடங்கின. இது குறித்து தகவல் அறிந்த ஒக்கக்குடி, விளாங்குடி, ஓலத்வேராயன்பேட்டை, வில்லியநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 6 கிராம மக்கள் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று வில்லியநல்லூர் கொள்ளிடம் ஆற்றுக்கு செல்லும் பாதை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இருந்து தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்கு தண்ணீர் எடுக்க இடம் தேர்வு செய்ய ஸ்மார்ட் சிட்டி பொறியாளர் எழிலரசன் தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அவர்களை வில்லியநல்லூர், விளாங்குடி, ஒக்கக்குடி, ஓலத்தேவராயன்பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 200-க்கு மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு பணி செய்ய விடாமல் தடுத்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் எந்த சமரசமும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நாங்கள் விவசாயம் செய்யும்போது கொள்ளிடம் ஆற்றில் குழிதோண்டி தண்ணீர் ஊற்று எடுத்து அதன் மூலம் விவசாயம் செய்து வருகிறோம். கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளியபிறகு நீர்மட்டம் அளவு குறைந்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் 100 அடிக்குமேல் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்கும் நிலைஉள்ளது. ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் குடிநீருக்காக குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மேலும் ஒரு ஆழ்குழாய் அமைத்து தண்ணீர் எடுத்தால் எங்களுடைய வாழ்வாதாரமும், விவசாயமும் முற்றிலும் அழிந்துவிடும். குடிநீர் பஞ்சமும் ஏற்படும். எனவே அரசு ஆழ்துளை கிணறு அமைப்பதை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com