17 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.1¾ கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள் அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சியில் 17 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.1¾ கோடி மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை அமைச்சர்கள் வழங்கினர்.
17 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ரூ.1¾ கோடி மதிப்பில் விலையில்லா சைக்கிள் அமைச்சர்கள் வழங்கினர்
Published on

மலைக்கோட்டை,


திருச்சி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8 பள்ளிகளைச் சேர்ந்த 1,759 மாணவ-மாணவிகளுக்கு ரூ.65 லட்சத்து 61 ஆயிரத்து 847 மதிப்பில் விலையில்லா சைக்கிள்களும், செம்பட்டு ஆபட் மார்ஷல் மேல்நிலைப்பள்ளியில் 9 பள்ளிகளை சேர்ந்த 3,111 மாணவ-மாணவிகளுக்கு ரூ. 1 கோடியே 15 லட்சத்து 53 ஆயிரத்து 344 மதிப்பில் என மொத்தம் 17 பள்ளிகளை சேர்ந்த 4,870 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்து 15 ஆயிரத்து 191 மதிப்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

நேற்று நடந்தது.


நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினர். விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

தமிழகத்தில்தான் பள்ளிக்கல்வித்துறை இந்தியாவிலேயே முதன்மையான துறையாக சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.27 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பள்ளிகளில் இடை நிற்றலை தவிர்க்க மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1500-ம், 11-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1500-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.2000-ம் என மொத்தம் 3 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. உங்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க கல்வி என்பது அவசியமான ஒன்றாகும். பள்ளியில் தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை மாணவர்கள் நன்றாக படித்து நல்ல அலுவலர்களாக பொறுப்பேற்று நமக்கு கற்றுக் கொடுத்த பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும். தாய்-தந்தையரையும், ஆசிரியரையும் மதிக்க வேண்டும். நாட்டிற்கும் வீட்டிற்கும் விசுவாசமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருட்டினன், திருச்சி ஆவின் தலைவர் கார்த்திகேயன், டவுன் ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா தேவி, ஆபட் மார்ஷல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆரோக்கியசாமி, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் அன்பழகன், கலிலுல் ரகுமான், நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், வக்கீல் சுரேஷ், ஜவகர்லால் நேரு, சுரேஷ்குப்தா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com