இந்த ஆண்டும் மாணவர்களுக்கு இலவச ‘நீட்’ தேர்வு பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இந்த ஆண்டும் மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டும் மாணவர்களுக்கு இலவச ‘நீட்’ தேர்வு பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Published on

உளுந்தூர்பேட்டை,

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மற்றும் மெட்ரிக் சுயநிதி பள்ளிகளுக்கான தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா உளுந்தூர்பேட்டை ஸ்ரீ விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு வாழ்த்துரை வழங்கினார். மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கருப்புசாமி வரவேற்றார்.

விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60 பள்ளிகள், விழுப்புரம் மாவட்டத்தில் 54 பள்ளிகள், கடலூர் மாவட்டத்தில் 66 பள்ளிகள், அரியலூர் மாவட்டத்தில் 25 பள்ளிகள் என மொத்தம் 205 அரசு நிதி உதவிபெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணைகளை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முனுசாமி, கிருஷ்ணபிரியா, திண்டிவனம் மாவட்ட கல்வி அதிகாரி சாந்தி, தமிழ்நாடு சர்க்கரை இணைய தலைவர் ராஜசேகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஞானவேல், அரசு வக்கீல் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீரோடும் சிறப்போடும் செயல்படுத்தி வருகிறார். தொழில் துறையில் சிறந்த மாநிலமாக தற்போது தமிழகம் உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க தயாராகி உள்ளது. டெல்டா பகுதிகளில் கூடுதலாக உணவு உற்பத்தி செய்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறையை பொறுத்த வரையில் பல சாதனைகளை அரசு செய்துள்ளது. 7 ஆயிரத்து 500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட உள்ளது. 80 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி சேனல் முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்தியாவிற்கேஇது முன் உதாரணம் ஆகியுள்ளது.

பல மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாத நிலையில் எல்லோரும் ஆன்-லைன் வகுப்பு மூலம் எப்படி படிப்பது என்பதில் பலருக்கு கேள்வி எழுந்த நிலையில், தமிழ்நாட்டில் தொலைக்காட்சி மூலமாக அட்டவணையிட்டு மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது அனைத்து கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கும் கல்வியை கொண்டு செல்ல முடிந்துள்ளது. தமிழகத்தில் தேவையான அளவுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சிலர் நீதிமன்றங்களுக்கு செல்வதால் இந்த பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகள் களையப்பட்ட பிறகு, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு தயாராக உள்ளது.

இந்த மாத இறுதிக்குள் நீட் தேர்வுக்கு தயாராக உள்ள மாணவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படும். பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது இல்லை. அவ்வாறு திறக்க வேண்டும் என்றால் மக்கள் நல்வாழ்வுத் துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்திய பிறகு முதல்-அமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com