கொரோனா தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு பயிற்சி முதல்அமைச்சர் நாராயணசாமி தகவல்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக முதல்அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
கொரோனா தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு பயிற்சி முதல்அமைச்சர் நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் சட்டசபை காபினெட் அறையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு முதல்அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அரசு செயலாளர்கள் அன்பரசு, சுர்பிர் சிங், அசோக்குமார், பிரசாந்த்குமார் பாண்டா, கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், நகராட்சி ஆணையர்கள் கந்தசாமி, சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதலை பேரழிவு என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு முதியவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவை மாநிலத்தில் சந்தேகத்தின்பேரில் வெளிநாட்டில் இருந்து வந்த 83 பேர் கண்காணிக்கப்பட்டனர். 16 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

அதேபோல் புதுவையில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய அளவுக்கு வென்டிலேட்டர், முகக்கவசம், பாதுகாப்பு உடைகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நோட்டீசு மூலம் இதுவரை 50 ஆயிரம் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு சோப்பு, கிருமி நாசினி மூலம் கைகழுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது இடங்களில் யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் எல்லைப்பகுதிகளில் சோதிக்கப்படுகிறார்கள். கொரோனா தொடர்பாக அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்த துறை தலைவர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க புதுவை அரசு டாக்டர்கள் 3 பேரும், ஜிப்மர் டாக்டர்கள் 3 பேரும் பயிற்சி எடுத்து வந்துள்ளனர். அவர்கள் பிற அரசு மற்றும் தனியார் மருததுவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.

கொரோனா தடுப்பு உபகணங்கள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் நோய்தாக்குதல் குறைந்துள்ளது. புதுவையில் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் சோதனை நடத்துகின்றனர். இவ்வாறு முதல்அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com