

ராஜபாளையம்,
இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அ.இ.அ.தி-.மு.க. சார்பில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றார். ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று இராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து பசும்பொன்தேவர் திருவுருவச் சிலை, மதுரை ராஜா கடைத்தெரு தியாகி அரங்கசாமி ராஜா திருவுருவச் சிலைக்கும், காந்திகலை மன்றம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா திருவுருவச் சிலைக்கும், பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா திருவுருவப் படத்திற்கும் பி.எஸ்.கே.பார்க் டாக்டர் அம்பேத்கார் திருவுருவச் சிலைக்கும், சாந்தி தியேட்டர் பி.ஏ.சக்கராஜா திருவுருவச் சிலைக்கும், காந்தி நிலை ரவுண்டானா பி.எஸ்.குமாரசாமி ராஜா திருவுருவச் சிலைக்கும், மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கும், பழைய பேருந்து நிலையம் கர்மவீரர் காமராஜர் திருவுருவச் சிலை மற்றும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கும், பஞ்சு மார்க்கெட் பண்டிட் ஜவகர்லால் நேருவின் திருவுருவச் சிலைக்கும், டி.பி.மில்ஸ் ரோடு கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கும், தெற்கு மலையடிப்பட்டியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை உட்பட சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது, அம்மாவாசை நல்ல நேரம் பார்த்து மாலை 5 மணிக்கு எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளேன்.
அருள்மிகு மாரியம்மன் அருளோடு மாரியம்மனை வணங்கி தெய்வத் திருமகன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு உங்களையெல்லாம் சந்தித்து வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கின்றேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி தமிழக முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் பன்னீர்செல்வம் நல்லாட்சி மீண்டும் தொடர உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலைச் சின்னத்தில் முத்திரையிட்டு உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை மாபெரும் வெற்றி பெற செய்யுங்கள். நான் இருக்கின்ற பகுதி மட்டுமல்ல நான் செல்லுகின்ற பகுதி எல்லாம் நன்றாக இருக்க வேண்டும் நன்றாக விளைய வேண்டும் என்று எண்ணம் படைத்தவன் நான். எனக்கு தாய்க்கு நிகரான தாய்மார்கள் உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். சிலபேர் கேட்கின்றார்கள் ஏன் சொந்த தொகுதியில் நிற்கவில்லை என்று எனது சொந்தத் தொகுதி சிவகாசி என்றாலும் எனது சொந்தக்கார தொகுதி ராஜபாளையம் ஆகும். ஆகவே எனது சொந்தக்கார தொகுதியில் நான் போட்டியிடுகின்றேன். இங்கு எனக்கு வீடு, விவசாய நிலங்கள் இருக்கின்றது. வாரத்தில் மூன்று நாட்கள் இங்கு வந்து கொண்டு தான் இருக்கின்றேன். இந்த பகுதி மக்களின் அன்பையும் பாசத்தையும் இந்தப்பகுதியில் சமுதாய மக்களின் பாசத்தையும் நன்றி உணர்வுகளை நினைத்துப் பார்த்து இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். 15 ஆண்டு காலமாக திருத்தங்கல் நகராட்சியில் வைஸ் சேர்மன் ஆகவும் 10 ஆண்டுகள் அமைச்சராக பணியாற்றி உள்ளேன். இந்த முறை இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற வேண்டும் என்று இங்குள்ள கழகத்தின் நிர்வாகிகள் மட்டுமல்ல பல்வேறு சமுதாய நிர்வாகிகள் என்னை பலமுறை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டார்கள். அவ்களின் விருப்பத்தின் பேரிலும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்காவும் இந்த தொகுதியில் நான் போட்டியிடுகின்றேன். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி தெய்வ அம்சம் கொண்ட தொகுதி ஆகும். இந்த தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்தும் உதவிகளையும் செய்து கொடுக்க சாலை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பதற்காக நான் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றேன். நான் அமைச்சராக இருந்த போதும் இந்த தொகுதி முன்னேற்றத்திற்காக வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். சந்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் நான் கொண்டுவந்தது. ராஜபாளையம் நகராட்சிக்கு கொண்டாநகரம் கூட்டு குடிநீர் திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன். ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகளை என்னுடைய முயற்சியில் தான் கொண்டுவரப்பட்டது. ராஜபாளையம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்தது நான் தான். இப்படி முக்கியமான திட்டங்களை கொண்டு வந்து ராஜபாளையம் நகரத்தின் வளர்ச்சிக்கு ராஜபாளையம், சேத்தூர், செட்டியார்பட்டி, பேரூராட்சிகள் வளர்ச்சிக்காக நான் 10 ஆண்டுகளாக பல்வேறு நன்மைகளை தொண்டுகளைச் செய்து உள்ளேன்.
இந்த தொகுதி மக்களின் அன்பையும் நான் பெற்றிருக்கிறேன். உங்களுக்காக உழைப்பதற்காக உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களின் தொண்டனாக நான் பணியாற்ற எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார் என்ற வரலாற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். உங்கள் சகோதரனாக நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் தொண்டனாக நான் இருப்பேன். நான் பேசி இந்த இடம் மாரியம்மன் கோவில் முன்பு ஆகும். நான் சொல்லுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் கடைப்பிடிப்பேன். எனக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கு ஒவ்வொன்றும் தெய்வத்துக்கு அழிக்கின்ற வாக்குகளாகும். உங்களுடைய ஒவ்வொரு வாக்குகளும் என்னை வெற்றியின் சிகரத்துக்கு அழைத்துச் செல்லும். உங்களை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி ஒரு அற்புதமான தொகுதி. இந்த பகுதி மக்கள் ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள் தொகுதி வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி தொகுதியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று பேசினார்.
பிரச்சாரத்தில் ராஜபாளையம் நகர செயலாளர் ரானாபாஸ்கரராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் குருசாமி, நவநத்தினம், மாரியப்பன், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் துணை முருகேசன், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜபாண்டியன், பால்கூட்டுறவு சங்க தலைவர் வனராஜ், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்குத்துரைபாண்டியன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராதாகிருஷ்ணன்ராஜா, விருதுநகர் மேற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், மாவட்டக் கழக இணைச் செயலர் அழகுராணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல இணைச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யதுசுல்தான், மாவட்ட மகளிரணி தமிழ்செல்வி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தொகுதி அமைப்பாளர் கார்த்திக், நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் முருகன், ராஜபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன் மற்றும் பி.ஜே.பி. நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.