

மதுரை,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
திண்டுக்கல்லில் நடந்த கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று படிப்படியாக குறைய தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு மிக முக்கியம், மக்களை காப்பதுதான் அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் தங்களை இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, அரசுக்கு ஒத்துழைப்பு நல்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணமடையச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அரசு அறிவிக்கும் வழிமுறைகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்ததன் மூலம் மக்கள் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கு தேவையான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது, நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.
சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டினை நடத்தி, புதியதிட்டங்களை கொண்டு வந்த காரணத்தால், இந்த மாவட்டத்தில், நிலக்கோட்டை, சிப்காட் தொழிற்பூங்காவில்,அமெரிக்காவைச் சேர்ந்த ஆம்வே நிறுவனம் ரூபாய் 250 கோடி முதலீட்டில் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் மருந்து மற்றும் ஊட்டச்சத்துப் பொருட்கள் உற்பத்தி விரிவாக்க திட்டத்தை நிறுவி உள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு பின், அணில் சேமியா, அம்பிகா காட்டன் மில்ஸ் மற்றும் சுவாதி ஹேட்ச்சரீஸ் என மூன்று நிறுவனங்கள் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு உள்ளன. இதன்மூலம், சுமார் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சிப்காட்டில், ரூபாய் 1,000 கோடி முதலீட்டில் 63 நிறுவனங்கள் நிறுவப்படவுள்ளன. இதன்மூலம் சுமார் 3,000 நபர்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற உள்ளனர். இதுவரை, 31 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5.25 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது. 4,733 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய் 106 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதுபற்றிய தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?
பதில்:- அதுபற்றி ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டேன். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவை நனவாக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறோம்.
கேள்வி:- சுற்றுலாவுக்கு அனுமதி இல்லாததால், கொடைக்கானல் நகர மக்கள் 4 மாதங்களாக தவித்து வருகின்றனர். இதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன?
பதில்:- சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. அவற்றை மீட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கேள்வி:- தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்து உள்ளது. அதை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?
பதில்:- கனமழையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது. நீலகிரியில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. அமைச்சர்கள் நேரில் சென்று நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டேன். அதன்படி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து உள்ளது.
கேள்வி:- ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், தி.மு.க. குடும்ப கட்சி என கூறி இருக்கிறாரே?
பதில்:- அது, அவர்களின் உள்கட்சி பிரச்சினை.
கேள்வி:- நயினார் நாகேந்திரன் அதிருப்தியில் இருக்கிறார். மீண்டும் அவர் அ.தி.மு.க.வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:- அ.தி.மு.க.வில் இருந்துதான் அவர், பா.ஜனதா சென்றார். அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வந்தால் சேர்த்துக் கொள்வோம்.
கேள்வி:- எஸ்.வி.சேகர், முதல்-அமைச்சருக்கு இந்தி தெரியும் என்று கூறியிருக்கிறாரே?
பதில்:- எனக்கு இந்தி தெரியும் என்று அவருக்கு எப்படி தெரியும். அவர், எந்த கட்சியை சேர்ந்தவர். பா.ஜனதாவில் இருந்தார் என்றால் அவர் பிரசாரத்துக்கு வரவில்லை. அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏதாவது பேசுவார், வழக்கு என்றால் ஒளிந்து கொள்வார்.
கேள்வி:- கொரோனா காலத்தில் ராமர் கோவில் கட்டுவது தவறானது என்று சமூக வலைத்தளங்களில் கருத்து பரவுகிறது. அதுபற்றி உங்களது கருத்து என்ன?
பதில்:- ராமர் கோவில் பிரச்சினை நீண்டகாலமாக இருக்கிறது. அது இன்று நேற்றைய பிரச்சினை அல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுகிறார்கள்.
கேள்வி:- இ-பாஸ் பெறுவதில் மக்களுக்கு சிரமம் உள்ளது. அது எளிமையாக்கப்படுமா?
பதில்:- தமிழகம் முழுவதும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை எளிதாக்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் இ-பாஸ் வழங்குவதற்கு ஒரு குழு மட்டுமே இருந்தது. தற்போது கூடுதலாக மற்றொரு குழு நியமிக்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைக்கு, உண்மையான காரணத்தை தெரிவித்து இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் சிறு, குறு தொழில் அதிபர்கள், மகளிர் குழுவினருடன் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்று அவர் பேசியதாவது:-
இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை நடந்த மாநிலம் தமிழகம்தான். மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு 1,490 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக மதுரையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
காய்ச்சல் முகாம்கள் நடத்தியதுதான் தொற்று கட்டுப்படுத்தப்பட காரணம். மதுரை மாநகராட்சி பகுதிகளில் 4 ஆயிரம் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. முககவசம் மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன.
மதுரையில் பிளாஸ்மா சிகிச்சையில் 7 பேர் நலமடைந்துள்ளனர். கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடி செலவில் 500 ஆம்புலன்சுகள் வாங்கப்பட உள்ளன. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவக்கல்வி இடங்கள் 150-ல் இருந்து 250-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
தென்மாவட்டங்களில் தொழில் தொடங்க வருவோருக்கு சென்னையை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது. கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து அரசு கடுமையாக போராடியும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மகளிருக்கு உதவி செய்யும் ஒரே அரசு அ.தி.மு.க. அரசுதான். அதே போன்று கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கி வருகிறோம். அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் என கர்ப்பிணிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளோம். ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் உயர்ந்த கல்வியை வழங்கி வருகிறோம்.
அவர்களுக்கு புத்தகம், பை, ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளோம். இன்று பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினால் போதும், அனைத்தும் இந்த அரசு அவர்களுக்கு செய்து வருகிறது. மேலும் படிக்கும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கி வருகிறோம்.
உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அவர் மறைந்தாலும் அவரது எண்ணப்படி இந்த அரசு அம்மா இருசக்கர வாகனத்தை ரூ.25 ஆயிரம் மானியத்தில் வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் இது வரை 9,329 பேருக்கு ரூ.23 கோடி மானியம் வழங்கி உள்ளோம். இது எல்லாம் வரலாற்று சாதனை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மகளிருக்கு இது போன்ற திட்டங்களை கொடுத்தது இல்லை.
கர்ப்பிணிகள் சுக பிரசவத்திற்காக ரூ.150 கோடியில் மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கொடுத்துள்ளோம். 350 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை மூலம் எண்ணற்ற மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். மதுரையில் ரூ.25 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொடுத்திருக்கிறோம். இன்றைக்கு மதுரை மிகப்பெரிய நகரமாக விளங்கி வருகிறது. தென்மாவட்டங்களுக்கு தலைநகராக விளங்கும் வகையில் உள்ள மதுரையில் இங்குள்ள மக்களுக்கு உயர்தர சிகிச்சை குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்று அம்மா கண்ட கனவான எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு மூலம் உருவாக்கி உள்ளோம். விரைவாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணி தொடங்கும். இது எல்லாம் வரும் போது, ஏழை மக்களுக்கு உயர்தரத்தில் மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்கும்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் உறுப்பினராக உள்ளனர். நீங்கள் அனைவரும் தாயுள்ளத்தோடு சோதனையான நேரத்தில் உதவி செய்ய வேண்டும். மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக இருந்து, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நோய் பரவலை தடுக்க முடியும். இந்த நோய்க்கு இது வரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த மருந்தை நீங்கள்தான் கொடுக்க வேண்டும்.
எப்படி என்றால் விழிப்புணர்வு மூலம்தான். விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே நோய் பரவலை தடுத்து மக்கள் இயல்பான நிலைக்கு வர முடியும். இதன் மூலம் நீங்கள் அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும். வீடு, வீடாக சென்று அந்த பகுதி மக்களுக்கு கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளி விட்டு பொருட்களை வாங்க வேண்டும். வீட்டிற்கு திரும்பிய உடன் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். கழிப்பறையை பல முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதையெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வாக கொடுத்தால் நோய் பரவலை தடுக்கலாம்.
இந்த நோய் எப்படி வந்தது என்பது யாருக்கும் தெரியாது. 210 நாடுகள் இந்த நோயால் படாதபாடு பட்டு திணறி கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் இதை கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இன்னும் கொரோனாவை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் அனைவரும் இந்த பணியில் ஈடுபட்டு அரசுக்கு துணையாக இருக்க வேண்டும்.
மகளிருக்கு மேலும் பல திட்டங்கள் உருவாக்கி தரப்படும். உங்களுக்கு தேவையான கடனுதவிகளை வழங்கி சொந்தக்காலில் நிற்பதற்கு அரசும் துணை நிற்கும். தொழில் கூட்டமைப்புகள் நல்ல ஆலோசனை வழங்கி உள்ளர்கள். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கூடிய விரைவில் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி மீண்டும் தொழில்கள் ஏற்கனவே இருந்ததை போல் உருவாக்குவதற்கு அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.