

சூரமங்கலம்:
சேலம்- சென்னை எழும்பூர் இடையே நேற்று இரவு மின்சார என்ஜின் மூலம் முதல் முறையாக ரெயில் இயக்கப்பட்டது.
ஆய்வு
சேலம் - விருத்தாசலம் ரெயில்வே பாதையில் ரெயில்கள் டீசல் என்ஜினில் இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து சேலம் முதல் விருத்தாசலம் இடையே தண்டவாள பாதை மின் மயமாக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் தெற்கு மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் மற்றும் அதிகாரிகள் குழுவினர் மின்சார என்ஜின் மூலம் ரெயிலை இயக்கி ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து சேலம்- விருத்தாசலம் இடையே சரக்கு ரெயில் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழித்தடத்தில் மின்சார என்ஜின் மூலம் பயணிகள் ரெயிலை இயக்கலாம் என ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதல் முறையாக...
அதன்படி சேலம் - சென்னை எழும்பூர் தினசரி விரைவு ரெயில் (22154) மற்றும் சென்னை எழும்பூர் - சேலம் தினசரி விரைவு ரெயில் (22153) ஆகிய ரெயில்கள் நேற்று முதல் சேலம் - விருத்தாசலம் இடையே மின்சார என்ஜின் மூலம் முதல் முறையாக இயக்கப்பட்டது, அதன்படி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.40 புறப்பட்ட சேலம் - சென்னை எழும்பூர் தினசரி விரைவு ரெயில் சேலம் - விருத்தாசலம் இடையே மின்சார என்ஜினால் இயக்கப்பட முதல் பயணிகள் ரெயில் என்னும் சிறப்பு பெற்றது.
இதேபோல் சென்னை எழும்பூர்-சேலம் தினசரி விரைவு ரெயில் இரவு 11.55 புறப்பட்டு விருத்தாசலம் - சேலம் இடையே மின்சார என்ஜின் மூலம் இயக்கப்பட்டது. ஏற்கனவே விருத்தாசலம்-சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர்- விருத்தாசலம் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.