திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக ‘பயோமெட்ரிக்’ முறையில் ஆசிரியர்கள் வருகைப்பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக 244 பள்ளிகளில் ‘பயோமெட்ரிக்’ முறையில் ஆசிரியர்களுக்கு வருகைப்பதிவு செய்யப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக ‘பயோமெட்ரிக்’ முறையில் ஆசிரியர்கள் வருகைப்பதிவு
Published on

திண்டுக்கல்,

தமிழக கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யப்பட உள்ளது.

இதில் முதல்கட்டமாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் அந்த முறை அமல்படுத்தப்படுகிறது. அதேநேரம் கல்வித்துறை அலுவலகங்களை பொறுத்தவரை அனைத்து அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமலுக்கு வருகிறது. இதற்காக மாவட்ட வாரியாக பயோமெட்ரிக் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்துக்கு மொத்தம் 525 கருவிகள் வந்துள்ளன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 244 பள்ளிகளுக்கு தலா 2 கருவிகள் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம் முதல்முறையாக பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களுக்கு வருகைப்பதிவு செய்யப்பட உள்ளது. இதுதவிர மீதமுள்ள கருவிகள் முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்படுகின்றன. தினமும் காலையில் பணிக்கு வரும் போதும், பணி முடிந்து திரும்பும் போதும் கட்டாயம் அதில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த கருவிகள் அனைத்தும் இன்று (புதன்கிழமை) சம்பந்தப்பட்ட அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட இருக்கிறது.

மேலும் பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்துவது குறித்து, தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com