இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா பயிற்சி சென்னையில் நடந்தது

இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் பேர் பங்குபெற்ற யோகா பயிற்சி சென்னையில் நடந்தது.
இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற யோகா பயிற்சி சென்னையில் நடந்தது
Published on

சென்னை,

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 30-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. 29-ந்தேதி தொடக்க விழா நடைபெறவுள்ளது.

கண்காட்சியையொட்டி பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மீனம்பாக்கம் ஏ.எம். ஜெயின் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலையில் கிருஷ்ணா சம்ஸ்கார யோகா நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஈஷா யோகா மையத்தை சேர்ந்த சுவாமி அபிபாதா தலைமை தாங்கினார். பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் யோகா ஒருங்கிணைப்பாளரும், விவேகானந்தா கல்விக்குழுமத்தின் இணைச்செயலாளருமான ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், இந்து ஆன்மிக மற்றும் சேவை மையத்தின் துணைத்தலைவருமான, ராஜலட்சுமி தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

மேடையில் அகன்ற திரையில் ஒளிப்பரப்பப்பட்ட யோகாசனங்களை பார்த்து மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர். வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாத்தல் என்ற கருத்தை முன்வைத்து சமஸ்திதி ஆசனமும், உடலை ஒரே நிலையில் வைத்திருக்கும் வகையில் 5 ஆசனங்களும் செய்து காட்டப்பட்டன. மரத்தை குறிக்கும் வகையில் விருஷ ஆசனம், கருடன் என்ற பறவையை குறிக்கும் வகையில் கருடாசனம், மற்றும் புஜங்காசனம், மரிஜரியாசனம், வியாகராசனம் செய்து காட்டப்பட்டன.

ஜீவராசிகளைப் பேணுதல் என்ற கருத்தை முன்வைத்து தோப்புக்கரணம், திரியக்க தடாசனம், கஜாசனம், மற்றும் கோமுகாஸனம், சுற்றுச் சூழலை பராமரித்தல் என்ற கருத்தில் பாதஹஸ்தாசனம், மத்ஸ்யாசனம் மற்றும் மகராசனமும், பெற்றோர்-பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தை முன்வைத்து பிரணமாசனம், சஷாங்காசனம் மற்றும் சாஷ்டாங்க நமஸ்காரம் ஆகிய ஆசனங்கள் செய்து காட்டப்பட்டன.

பெண்மையை போற்றுதல் என்ற கருத்தை வலியுறுத்தி திரிகோணாசனம், தித்தலியாசனம், சித்தி யோனியாசனம் ஆகிய பயிற்சிகளை மாணவர்கள் செய்து காட்டினர். நாட்டுப்பற்றை ஊட்டுதல் என்ற கருத்தில் சிம்ம கர்ஜாசனம், வீரபத்ராசனம், மற்றும் சவாசனம் செய்யப்பட்டன. 30 பள்ளிகள், 3 கல்லூரிகளைச்சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். அவர்கள் உடலை வில்லாய் வளைத்து யோகாசனங்களை செய்தது பார்ப்போரை பரவசம் அடைய செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com