புதுவையின் வருமானத்துக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக உள்ளார் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி வருமானத்துக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக உள்ளார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுவையின் வருமானத்துக்கு கவர்னர் கிரண்பெடி தடையாக உள்ளார் நாராயணசாமி குற்றச்சாட்டு
Published on

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து 7 நாட்களாக போராடி வருகிறார்கள். அரியானா அரசு விவசாயிகள் மீது அடக்கு முறையை கையாண்ட ணது. ஆனால் அதற்கு அஞ்சாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை.

இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த சட்டங்கள் கார்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக உள்ளது. இந்த சட்டங்களை வாபஸ் பெறாதது அநீதியானது. விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், பயிர் செய்ய காலத்தோடு கடன் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று சாமிநாதன் கமிட்டி கூறியுள்ளது. ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கை எதையும் ஏற்கவில்லை.

இதன்காரணமாக பல மாநில விவசாயிகள் இப்போது போராட்டத்துக்கு டெல்லி நோக்கி செல்கிறார்கள். போராட்டமும் வலுக்கிறது. மத்திய அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதை ஏற்க முடியாது.

கொரோனா காரணமாக புதுவை மாநிலத்தில் மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் ஊரடங்கை கடைபிடித்தோம். ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை நாம் 99 சதவீதம் கொரோனாவை ஒழித்துவிட்டோம்.

புதுவை மாநிலத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மது பிரியர்களும் வருகிறார்கள். எனவே மதுபானங்களுக்கு கொரோனா வரியை ரத்துசெய்தும், 15 சதவீத வரி உயர்வினை விதித்தும், உரிம கட்டணத்தை 2 மடங்காக உயர்த்தியும் கோப்புகளை அனுப்பினோம்.

ஆனால் கவர்னர் கிரண்பெடி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எங்கள் பரிந்துரையை நிராகரித்துவிட்டார். இது சட்டம், விதிமுறைக்கு எதிரானது. வரி குறைப்பு என்பது சுற்றுலா வளரத்தான். மக்களின் கோரிக்கையை ஏற்று வரியை குறைத்தோம். கவர்னர் அமைச்சரவை எடுக்கும் முடிவினை அங்கீகரிக்கவேண்டும்.

அதில் ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும். ஆனால் அமைச்சரவை முடிவினை மாற்றக்கூடாது. கூடுதல் வரிபோடுவதால் பொருளாதாரம், வருமானம் பாதிக்கும். கவர்னர் புதுவை வருமானத்துக்கு தடையாக உள்ளார்.

புதுவையில் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக புயலின்போது உயிர்சேதம் இல்லாமல் காத்தோம். மத்தியக்குழு விரைவில் புதுவை வந்து பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப உள்ளது. புயல் சேதம் தொடர்பாக மாநில அரசும் கணக்கெடுத்து உள்ளது. எங்கள் கணக்கெடுப்பின்படி சுமார் ரூ.400 கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.100 கோடி வழங்கவேண்டும் என்று கடிதம் எழுதினேன். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இடைக்கால நிவாரணமும் தரவில்லை.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்வழிக்கல்வி மாற்றப்படுகிறது. தூர்தர்ஷனில் சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். தமிழை மறைத்து இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்ப்பாடம் இருக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

மத்திய அரசு படிப்படியாக மாநில உரிமைகளை பறிக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பதை ஏற்கமுடியாது. இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com