விடுபட்ட 7,826 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் விடுபட்ட 7,826 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.
விடுபட்ட 7,826 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை கலெக்டர் தகவல்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி 11 ஆயிரத்து 900 எக்டேரில் செய்யப்பட்டுள்ளது. உளுந்து 4 ஆயிரத்து 150 எக்டேரிலும், நிலக்கடலை 153 எக்டேரிலும், எள் 903 எக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான ஆடுதுறை-43, கோ-51 ரக விதைநெல் 107 டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆடுதுறை-5, வம்பன்-6 ரக உளுந்து விதைகள் 55 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உர தேவைக்காக யூரியா 5,560 டன்னும், டி.ஏ.பி. உரம் 5,436 டன்னும், பொட்டாஷ் 3,150 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 5,447 டன்னும் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விதை கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் மற்றும் உளுந்து விதைகளை மானியத்தில் வழங்க ரூ.1 கோடியே 46 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. விடுபட்ட 7,826 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com