திறப்பு விழாவுக்காக காத்து இருக்கும் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள்

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சிகளில் கட்டி முடித்து பல மாதங்களாக திறப்பு விழாவுக்காக காத்து இருக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்களை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திறப்பு விழாவுக்காக காத்து இருக்கும் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள்
Published on

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள வேங்கடமங்கலம், நெடுங்குன்றம், நல்லம்பாக்கம், பெருமாட்டுநல்லூர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் உள்ள இளைஞர்கள், முதியவர்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்து ஆரோக்கியத்துடன் வாழவும், சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழவும் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்க முடிவு செய்த தமிழக அரசு, அதன்படி 10 ஊராட்சிகளிலும் அம்மா பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தது.

அந்த நிதியை கொண்டு அந்த 10 ஊராட்சிகளிலும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. பூங்காவின் உள்புறமே உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு உள்ளது.

பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்காக சறுக்குகள், ஊஞ்சல்கள் உள்ளிட்ட வண்ணமயமான விளையாட்டு உபகரணங்களும், முதியவர்கள் நடைபயிற்சியில் ஈடுபட நடைபாதையும், செடிகள், பச்சைபசேலென்ற புற்களுடன் கண்ணை கவரும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஆனால் பூங்காவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய தேவையான உபகரணங்கள் மட்டும் இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக 10 ஊராட்சிகளிலும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல், திறப்பு விழாவுக்காக காத்து இருக்கின்றன.

இதனால் சிறுவர்கள் விளையாடுவதற்காக பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் வீணாக உள்ளது. அந்த பகுதி சிறுவர், சிறுமிகளும் பூங்கா எப்போது திறக்கப்படும், நாம் எப்போது உள்ளே சென்று விளையாடலாம் என்ற ஏக்கத்துடனேயே பூங்காவை வெளியில் நின்றபடியே பார்த்து செல்கின்றனர்.

எனவே பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உடற்பயிற்சி கூடத்துக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்கி, மேற்கண்ட 10 ஊராட்சிகளிலும் பல மாதங்களாக பூட்டியே கிடக்கும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு உள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்களை விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com