பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 28 பேர் கைது

புதுவையில் இன்று பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 28 பேர் கைது
Published on

காரைக்கால்,

நாடெங்கும் கொரோனா தொற்று பரவல் 2-ம் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பள்ளிகள் திறப்பதை கண்டித்து கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்காலை சேர்ந்த போராளிகள் குழு, த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்தன.

அதன்படி நேற்று காலை த.மு.மு.க. மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில் 10 பேர் அமைச்சர் கமலக்கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திருநள்ளாறு போலீசாரிடம் அனுமதி கேட்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அனுமதி மறுத்து அவர்கள் 10 பேரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காக கைது செய்தனர்.

இதுபற்றி அறிந்தவுடன், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும், பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் த.மு.மு.க. மாநில செயலாளர் அப்துல்ரஹீம் தலைமையில் நிர்வாகிகள் திருநள்ளாறு போலீஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் அம்பகரத்தூர் போலீஸ் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வை சேர்ந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர். தனித்தனியாக நடந்த இந்த போராட்டங்களில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com