புயலை முன்னிட்டு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் அறிவுரை

புயல் காரணமாக விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் அறிவுரை வழங்கியுள்ளார்.
புயலை முன்னிட்டு விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கலெக்டர் அறிவுரை
Published on

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம் அருகே கடந்த மாதம் 16-ந் தேதி அதிவேகத்துடன் கரையை கடந்த கஜா புயலின் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தென்னை, மா, பலா மற்றும் பல்லாண்டு மரப்பயிர்கள் பலத்த சேதத்திற்கு உள்ளாயின.

இந்த நிலையில் இன்று (15-ந் தேதி) புதிய புயல் தமிழகத்தின் வடக்கு கடற்கரையோர மாவட்டமான திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து, நாகப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. இதன் காரணமாக கனமழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி தென்னை உள்ளிட்ட பல்வேறு பல்லாண்டு பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் அவற்றை காப்பாற்றிட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள், 7 முதல் 40 ஆண்டுகளுக்கு உட்பட்ட அதிக மகசூல் தரும் தென்னை மரங்கள் பாதிப்புக்குமென எதிர்பார்க்கப்படுவதால், அத்தகைய மரங்களை கண்டறிந்து அதிலுள்ள தேங்காய், இளநிலை மற்றும் அதிக பாரமுள்ள தென்னை ஓலைகளை அகற்ற வேண்டும்.

இதன் மூலம் இத்தகைய மரங்களில் பாரம் வெகுவாக குறைந்து, புயலினை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்வரும் 4 நாட்களுக்கு தென்னை தோப்புகளில் நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் வேர்ப்பகுதி நன்றாக இறுகி, காற்றிலிருந்து சாயாமல் இருக்க வாய்ப்பு ஏற்படும்.

இதே போல் மா, பலா மற்றும் முந்திரி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்துள்ளவர்கள், புயல் காற்று வீசும் சமயம், காற்று மரங்களில் ஊடே புகுந்து இலகுவாக செல்லும் வகையில் பக்கவாட்டு கிளைகளையும், அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்து, மரம் வேரோடு சாய்ந்து விடுவதை தடுக்கலாம்.

கவாத்து செய்த இடங்களில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஒரு லிட்டர் நீரில் 300 கிராம் கலந்த கலவை கொண்டு பூச வேண்டும். தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிடுவதன் மூலம் வேர்ப்பகுதி இறுகி, மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம். உரமிடுதல் போன்ற பணிகளை மரத்தை சுற்றி மண் அகற்றி, தற்சமயம் மேற்கொள்ளாமல் புயல் கடந்த பின் மேற்கொள்வது சிறந்தது. வாழை தோப்பினை சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் வேம்பு, பூவரசு, புங்கன் போன்ற மரங்களின் கிளைகளை முழுவதும் வெட்டி, தழைகளை குறைப்பதன் மூலம் மரங்களை புயலில் இருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு வெட்டி அகற்றிய இலைகளை கொண்டு பசுந்தழை உரமாக பயன்படுத்தலாம். நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களில் தண்ணீரை வடித்து, வடிகால் வசதியினை நன்றாக ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

இதன் மூலம் புயலில் இருந்து விவசாயிகள் தங்கள் மரங்கள், பயிர்களை பாதுகாத்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com