

திருச்சி,
திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. அப்போது பள்ளியின் செயலாளரும், அ.தி.மு.க. வட்ட செயலாளருமான செக்கடி சலீம்(வயது 57) அதே பள்ளியில் படிக்கும் ஒரு மாணவியை தனது மடியில் அமர வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன மாணவி அவரிடம் இருந்து விடுபட்டு சென்றார். ஆனால் அதுபற்றி யாரிடமும் கூறவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் அந்த மாணவியை பெற்றோர் பள்ளிக்கு அனுப்புவதற்காக தயார்படுத்தினர். அப்போது மாணவி, பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தின்போது தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக அந்த பகுதி பொதுமக்களை திரட்டிச்சென்று பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு இருந்த சலீமை பிடித்து இளைஞர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தில்லைநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் இருந்து சலீமை மீட்டு, ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு கூடி நின்ற பெற்றோர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பள்ளி முன்பு கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பொதுமக்களை சமாதானப்படுத்திய போலீசார், பள்ளிக்குள் சென்று அங்கு பணியில் இருந்த ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்கள்.
அதன்பிறகு மாணவியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தார். இந்த சம்பவம் ஆழ்வார்தோப்பு பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.