பஞ்சாலை தொழிலாளர்களுக்கு சம்பளம், பணிக்கொடை வழங்கவேண்டும் - சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

புதுவை பஞ்சாலை தொழிலாளர்களுக்கு சம்பளம், பணிக்கொடை வழங்கவேண்டும் என்று சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
பஞ்சாலை தொழிலாளர்களுக்கு சம்பளம், பணிக்கொடை வழங்கவேண்டும் - சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாலை தொழிலையும், தொழிலாளர்களையும் நம்பியே புதுவை மாநிலம் இயங்கி வந்தது. புதுவையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் தவறான கொள்கையால் பஞ்சாலைகள் நிலை கேள்விக்குறியானது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து வந்த பஞ்சாலைகள் நசிந்துபோய்விட்டது. சுதேசி, பாரதி, ரோடியர் பஞ்சாலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை.

இந்த சலுகைகளை பெற தொழிலாளர்கள் போராடியே தங்களது வாழ்க்கையை கழித்துவிட்டனர். அரசின் வாக்குறுதிகளை நம்பி தானாக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்ய முடியாமல், உரிய கல்வி வழங்க முடியாமலும் வறுமையில் வாடி வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். எஞ்சிய தொழிலாளர்கள் அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று குற்றுயிராக காத்துக்கிடக்கின்றனர்.

பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றிய இந்த 3 பஞ்சாலைகளிலும் தற்போது 1,150 தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கும் பாதி சம்பளத்தை நிர்வாகம் வழங்கி வந்தது. இந்த சம்பளத்தையும் கடந்த 20 மாதமாக நிறுத்திவிட்டனர். இதனால் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலையும் கேள்விக்குறியாகிவிட்டது.

தனியார் தொழிற்சாலைகள், தொழிலாளர் விரோதபோக்கினை கடைபிடித்தால் தட்டிக்கேட்க வேண்டிய அரசும் தொழிலாளர் துறையும் தனது நிர்வாகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், பணிக்கொடை, சலுகைகள் வழங்காமல் இருப்பது வேதனையானது. சமீபத்தில் சுப்பையா நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்ற தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவரின் மனைவி தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வறுமையில் வாடி வதங்கி சாகும்வரை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? அரசு உரிய முடிவெடுத்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளத்தையும், ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடை, இதர சலுகைகள் வழங்கவேண்டும். குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து எடுக்கப்படும் முடிவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். தனது குடிமக்கள் இறப்பதை வேடிக்கை பார்க்கும் அரசாக இந்த அரசு இனி இருக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com