சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் கலெக்டர் ராமன் வழங்கினார்

சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீரை கலெக்டர் ராமன் வழங்கினார்.
சேலத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் கலெக்டர் ராமன் வழங்கினார்
Published on

சேலம்,

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம், கோட்டம் எண்.11-க்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை இந்திய கைத்தறி தொழிநுட்ப கழக வளாகத்தில் தனிமைப்படுத்துபவர்களுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினார். முன்னதாக அவற்றை கலெக்டர் ராமன் பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் பேசும் போது கூறியதாவது:-

பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், நகராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்கள், தூய்மை பணியாளர்கள், முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு வருகைதரும் பொதுமக்கள், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 15 வகையான மூலிகை பொருட்கள் அடங்கிய கபசுர குடிநீர், வைட்டமின் டானிக், அஸ்கார்பிக் ஆசிட் மாத்திரைகள், ஜிங்க் சல்பேட் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, சேலம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 44 ஆயிரத்து 110 பேர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கைத்தறி தொழிநுட்ப கழக வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கடந்த மே மாதம் 13-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 1,372 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 1,265 நபர்கள் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 107 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி, நகர் நல அலுவலர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com