உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் 212 வேளாண் கருவிகள்; கலெக்டர் வழங்கினார்

நாகர்கோவிலில் நடந்த விழாவில் 40 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் 212 வேளாண் கருவிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் 212 வேளாண் கருவிகள்; கலெக்டர் வழங்கினார்
Published on

நாகர்கோவில்,

கூட்டுப்பண்ணையத் திட்டம் 2019 2020ன் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2 கோடி மதிப்பில் 212 வேளாண் கருவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் கீழ் கூட்டுப் பண்ணைய திட்டம் 2017 2018ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தற்போது வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் சிறு, குறு விவசாயிகள் கிராமம் வாரியாக ஒருங்கிணைந்து கூட்டாக இடுபொருட்கள் வாங்கி விவசாயம் செய்து, அதன்மூலம் உற்பத்தி செய்யும் பொருட்களை கூட்டாக விற்பனை செய்வது. மேலும் செலவைக் குறைத்து இருமடங்கு உற்பத்தி, மும்மடங்கு லாபம் பெற வழிவகுப்பதாகும்.

இந்த திட்டத்தின் செயலாக்கம் கிராமந்தோறும் உள்ள 20 சிறு குறு விவசாயிகள் இணைந்து உழவர் ஆர்வலர் குழு அமைக்க வேண்டும் என்பதாகும். ஆர்வமுள்ள விவசாயிகள் பங்குத் தொகை ரூ.1000 மற்றும் சந்தா ரூ.100 செலுத்தி, குழுவில் இணைய வேண்டும். இந்த குழுவிற்கான தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். இவ்வாறு தொடங்கப்பட்ட 5 உழவர் ஆர்வலர் குழுவில் பிரதிநிதிகளான தலைவர், செயலாளர், பொருளாளர் உழவர் உற்பத்தியாளர் குழுவின் உறுப்பினராக இருப்பார்கள்.

இந்த குழுக்களுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் ஒப்புதல் பெற்ற எந்திரங்கள் வாங்க தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் ரூ.5 லட்சம் மானியம் வழங்குகின்றது. குமரி மாவட்டத்தில் 2019 2020ல் தொடங்கப்பட்ட 40 உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் 35 குழுவுக்கு குமரி மாவட்ட கலெக்டர் மூலம் டிராக்டர், மினி டிராக்டர்களை வெட்டும் கருவி, எச்.டி.பி. விசைத்தெளிப்பான், புல்வெட்டும் கருவி, ரோட்டோவேட்டர் போன்ற 68 எந்திரங்கள் ரூ.1 கோடியே 10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மொத்தம் 40 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 212 எந்திரங்கள் ரூ.2 கோடி மானியத்தில் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சத்தியஜோஸ், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வரெத்தினம், உழவர் பயிற்சி நிலைய (வேளாண்மை) துணை இயக்குனர் அவ்வை மீனாட்சி, வேளாண்மை துணை இயக்குனர்கள் ஜாண் விஜூ பிரகாஷ், முருகேசன், வேளாண்மை அலுவலர் சுரேஷ், மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com