

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று (அதாவது நேற்று) அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் திங்கட்கிழமை(நாளை) தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 30-ந் தேதியாகும். அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 3-ந் தேதியாகும். அக்டோபர் 21-ந் தேதி (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. 24-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இன்றைய தினத்தில் இருந்தே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளர்களும், 25 திருநங்கைகளும், 209 தபால் ஓட்டுகள் என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர்கள் உள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 139 இடங்களில் 275 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும், 6 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் 9 பறக்கும் படை குழுக்களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்படும்.
இதில் 8 மணி நேரத்திற்கு ஒருமுறை சுழற்சி முறையில் 3 குழுக்களும் பணியில் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற சட்டமன்ற தொகுதிகளில் 3 பறக்கும் படை குழுக்களும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 39 பறக்கும் படை, 39 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த குழுக்கள் திங்கட்கிழமை (நாளை) முதல் செயல்படும்.
தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்களை கண்காணிக்க வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட உள்ளது. இத்தேர்தலில் 658 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 544 கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் 528 வி.வி.பேட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எந்திரங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், உதவியாளர்கள் என 1,333 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதற்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 29 மைக்ரோ அப்சர்வர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். தேர்தல் அதிகாரியாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம், தேர்தல் அலுவலகமாக செயல்படும். தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உடனிருந்தார்.