

கள்ளக்குறிச்சி,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ராஜா, மாவட்ட அமைப்பு செயலாளர் பெரிய தமிழன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வரதராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் ராஜ்குமார், மாநில செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். இதற்கான மாவட்ட பணிமூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும்.
இ-அடங்கல் பணியை தொடங்குவதற்கு முன்னதாக நில அளவை மற்றும் கிராம நிர்வாக பயிற்சி முடிக்காத அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் உடனடியாக பயிற்சி வழங்கிட வேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பிரித்த போது பணிமாறுதல் விருப்பம் தெரிவித்திருந்தவர்களுக்கு மாறுதல் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வாணையத்தால் புதிய கிராம நிர்வாக அலுவலர்கள் பணியமர்த்தப்படுவதற்கு முன்பாக உடனடியாக பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட இணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட பிரசார செயலாளர் கண்ணதாசன், மாவட்ட சட்ட ஆலோசகர் திருவெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.