வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும் - கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டத்துக்கு வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர்கள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும் - கலெக்டர் கதிரவன் வேண்டுகோள்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

அண்டை மாநிலங்களில் ஈரோடு மாவட்டத்துக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பவானி அருகே மைலம்பாடியில் உள்ள கே.எஸ். யார்ன் என்ற நிறுவனத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த 5 பேர் வேலைக்காக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல் அந்த நிறுவனத்தில் தங்கியிருந்தவர்களும், அருகில் உள்ளவர்களையும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி கை கழுவுதல் மற்றும் தங்களது வீடுகளை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தொழிற்சாலைகளில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது. வெளிமாநிலத்தவரை வேலைக்கு அமர்த்திய தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி, சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, சீல் வைப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்.

ஈரோடு மாவட்டத்துக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த உறவினர்களோ அல்லது சுற்றுலா பயணிகளோ வந்தால் உடனடியாக தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி, சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்காதவர்கள் மீது நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

நோய் பாதித்தவர்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருந்தால் தாமாக முன்வந்து அரசு டாக்டரை அணுகினால் உரிய பாதுகாப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்படும். பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி, கோபி அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் கொரோனா நோய்க்கான தனிப்பிரிவு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் 4 மணிநேரத்துக்கு ஒருமுறை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மற்றவர்களுடன் உரையாடும்போது சற்று இடைவெளிவிட்டு இருப்பது சிறந்தது. கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். தொழிற்சாலைகளை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளில் பணிபுரியும்போது வாய், மூக்கு, கண் ஆகியவற்றை தொடக்கூடாது. பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா வைரஸ் பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வதந்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com