குட்டை நீரில் 2 நாட்களாக நிற்கும் வால் துண்டான காட்டு யானை கும்கிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை

வால் துண்டானதால் காயத்தால் அவதிப்படும் காட்டு யானை வனப்பகுதி குட்டையில் 2 நாட்களாக நின்று கொண்டு இருக்கிறது. அந்த காட்டு யானைக்கு கும்கிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
குட்டை நீரில் 2 நாட்களாக நிற்கும் வால் துண்டான காட்டு யானை கும்கிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கை
Published on

கொள்ளேகால்,

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு சரணாலயத்திற்கு உட்பட்டது காவிரி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் வசித்து வரும் 2 ஆண் காட்டு யானைகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 யானைகளும் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டன.

இந்த மோதலில் ஒரு காட்டு யானையின் வால் துண்டானது. இதில் யானையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் யானை பிளிறியபடி வனப்பகுதியில் தண்ணீர் தேங்கி கிடக்கும் குட்டைக்குள் இறங்கி நிற்கிறது. இந்த நிலையில் நேற்று அந்த வழியாக சென்ற வனஊழியர்கள், வால் துண்டான நிலையில் பின்பகுதியில் காயங்களுடன் யானை ஒன்று குட்டை தண்ணீரில் இறங்கி நிற்பதை கண்டனர். பின்னர் அந்த யானையை தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியை வனத்துறையினர் எடுத்தனர். ஆனால் யானை தண்ணீரை விட்டு வெளியே வரவே இல்லை.

கும்கிகள் உதவியுடன்...

இந்த நிலையில் பந்திப்பூர் வனத்துறை அதிகாரி மனோஜ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-

காட்டு யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒரு காட்டு யானையின் வால் துண்டாகி பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அந்த காட்டு யானை வலி தாங்க முடியாமல் தண்ணீருக்குள் நிற்கிறது. அந்த காட்டு யானையை வெளியே கொண்டு வந்து சிகிச்சை அளிக்க மத்திகோடு வனப்பகுதியில் இருந்து அபிமன்யு, கிருஷ்ணா என்ற கும்கிகள் வர உள்ளன. பெங்களூரு பன்னரகட்டா உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் உமாசங்கரும் யானைக்கு சிகிச்சை அளிக்க வர உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com