சாப்டூர் வனப்பகுதியில் பயங்கர காட்டு தீயால் 35 ஏக்கரில் அறிய வகை மூலிகைகள் எரிந்து நாசம் வனப்பகுதிகள் கண்காணிக்கப்படுவதாக அதிகாரி தகவல்

சாப்டூரில் வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் 35 ஏக்கரில் அறிய வகை மூலிகைகள் எரிந்து நாசமானதாகவும், தொடர்ந்து வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
சாப்டூர் வனப்பகுதியில் பயங்கர காட்டு தீயால் 35 ஏக்கரில் அறிய வகை மூலிகைகள் எரிந்து நாசம் வனப்பகுதிகள் கண்காணிக்கப்படுவதாக அதிகாரி தகவல்
Published on

பேரையூர்,

சாப்டூர் வனப்பகுதியில் உள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 29ந்தேதி முதல் நேற்றுமுன்தினம் வரை பக்தர்கள் வழிபட வனத்துறை அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து பக்தர்களும் மலைக்கு சென்று சாமியை வழிபட்டனர். இந்தநிலையில் கடந்த 31ந்தேதி இரவு 5ம் பீட்டில் உள்ள மாவூற்று என்னும் இடத்தில் சாரல் மழை பெய்யும் போது மின்னல் தாக்கியது.

அதில் அப்பகுதியில் இருந்த தரகு புற்கள் மீது தீ பிடித்து எரிந்தது. அதே போல் பாப்பனத்தம் கோவில் பகுதியிலும் தீ பிடித்தது. பின்னர் வன பகுதிக்குள் எரிந்து கொண்டு இருந்த தீயை வனத்துறையினர் குழு குழுக்களாக சென்று, எதிர் தீ தடுப்பு முறை நடவடிக்கை மூலம் தீயை அணைத்தனர்.

இதில் தீ எரியும் எதிர்பக்கம் சென்று அந்த பகுதியில் உள்ள புற்களை அகற்றி தீ மேலும் பரவாமல் தடுப்பது, மேலும் மரக்கிளைகள், குலைகளை கட்டுகளாக கட்டி அவற்றின் மூலம் தீயை அணைத்தனர். இந்தநிலையில் பக்தர்கள் வரும் வழியில் காட்டுத்தீ எரியாவிட்டாலும், முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் அனைவரும் கோவிலில் தங்க வைக்கப்பட்டனர். தீ முழுவதுமாக அணைக்கப்பட்டவுடன், பக்தர்கள் கோவிலில் இருந்து இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

தீ பற்றிய இடங்களில் புற்கள் புதர்களோடு பாறைகள் இருந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடிந்தது. மாவூற்று பகுதியில் 28 ஏக்கர் பகுதியும், பாப்பனத்தம் பகுதியில் 7 ஏக்கர் பகுதியும் தீயால் சேதமடைந்தன. இதனால் இந்த பகுதியில் இருந்த அறிய வகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமடைந்தன.

இதுகுறித்து சாப்டூர் வன சரகர் பொன்னுசாமி கூறும்போது, வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை எதிர் தீ தடுப்பு முறை மூலம் அணைக்கப்பட்டது. வனப்பகுதியில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரோந்து பணி மூலம் வனப்பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com