விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.13½ கோடி கடன் வாங்கி மோசடி;சர்க்கரை ஆலை மீது போலீசில் புகார்

பெலகாவியில் விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.13½ கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக, சர்க்கரை ஆலை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.13½ கோடி கடன் வாங்கி மோசடி;சர்க்கரை ஆலை மீது போலீசில் புகார்
Published on

பெலகாவி: பெலகாவியில் விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.13 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக, சர்க்கரை ஆலை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

ரூ.13 கோடி மோசடி

பெலகாவி மாவட்டம் பைலஒங்கலா தாலுகா எம்.கே.உப்பள்ளி கிராமத்தில் மல்லபிரபா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலையில் பைலஒங்கலா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த கரும்பு விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் கரும்புகளை கொடுத்து வந்தனர். அப்போது விவசாயிகளிடம் இருந்து ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல்களை அந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை பயன்படுத்தி விவசாயிகள் பெயரில் ஒரு வங்கியில் இருந்து சர்க்கரை ஆலை கடன் வாங்கியதாக தெரிகிறது. அதாவது 169 விவசாயிகளின் பெயரில் தலா ரூ.8 லட்சம் என ரூ.13 கோடியே 52 லட்சம் கடன் வாங்கி அந்த சர்க்கரை ஆலை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

நியாயம் கிடைக்கும்

தங்கள் பெயரில் கடன் வாங்கி சர்க்கரை ஆலை மோசடி செய்தது பற்றி அறிந்ததும் விவசாயிகள் எம்.கே.உப்பள்ளி போலீஸ் நிலையத்தில் சர்க்கரை ஆலை நிர்வாகம் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி குறித்து மந்திரி சங்கர் பி.பட்டீல் கூறும்போது, மல்லபிரபா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் விவசாயிகள் பெயரில் ரூ.13 கோடி கடன் வாங்கி மோசடி செய்தது பற்றி எனது கவனத்திற்கு வந்து உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இந்த மோசடி குறித்து விசாரணை தொடங்கி விட்டது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நான் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவானவன். அவர்களுக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com