வாடிக்கையாளர்களிடம் பண மோசடி; வாலிபர் கைது

பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பரிசு கொடுக்க வந்த போது சிக்கினார்.
வாடிக்கையாளர்களிடம் பண மோசடி; வாலிபர் கைது
Published on

பெங்களூரு:பெங்களூருவில் ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பரிசு கொடுக்க வந்த போது சிக்கினார்.

வாடிக்கையாளர்களிடம் மோசடி

பெங்களூரு ராஜராஜேசுவரிநகரில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) பணம் எடுக்க ஒரு நபர் வந்திருந்தார். அப்போது அங்கிருந்து ஒரு வாலிபர், ஏ.டி.எம். மையத்தில் பல முறை பணம் எடுத்து விட்டதால், என்னுடைய காடை பயன்படுத்த முடியவில்லை, உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுத்தால், உங்களது வங்கி கணக்குக்கு உடனடியாக பணம் அனுப்பி வைத்து விடுவதாக வாலிபர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்த நபரும், வாலிபரிடம் பணம் கொடுத்திருந்தார். பின்னர் அந்த நபருக்கு, தனது செல்போனில் இருந்து வங்கி கணக்கு மூலமாக பணத்தை திரும்ப அனுப்பி வைத்ததற்கான ஆதாரங்களை வாலிபர் காட்டியுள்ளார். இதையடுத்து, அந்த நபரும் அங்கிருந்து சென்றிருந்தார். ஆனால் அந்த நபருக்கு, வாலிபர் பணம் அனுப்பி வைக்காமல் மோசடி செய்திருந்தார். இதுகுறித்து அந்த நபர், ராஜராஜேசுவரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இன்ஸ்பெக்டருக்கு பரிசு

போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தேடிவந்தனர். மேலும் ஏ.டி.எம். மையம், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, அந்த வாலிபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதன்மூலம் அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில், ராஜராஜேசுவரிநகர் போலீஸ் நிலையத்திற்கு அதே வாலிபர், இன்ஸ்பெக்டர் சிவண்ணாவை சந்தித்து பரிசு மற்றும் பூங்கொத்து கொடுக்க வந்திருந்தார். அதன்படி, அவர், இன்ஸ்பெக்டரை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் ஏ.டி.எம். மையத்தில் நடந்த பண மோசடி குறித்து விசாரிக்கும் போலீஸ்காரர் வந்த போது, இன்ஸ்பெக்டருடன் இருந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி இன்ஸ்பெக்டர் சிவண்ணாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபரை பிடித்து விசாரித்ததுடன், கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அவர் தான் பண மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

செல்போன் செயலி மூலமாக...

உடனே அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் மண்டியா மாவட்டம் நாகமங்களாவை சேர்ந்த நவீன்குமார் (வயது 25) என்று தெரிந்தது. இவர், பெங்களூருவில் தங்கி இருந்து வீடுகளுக்கு எலெக்ட்ரிக்கல் வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் இணையதளம் மூலமாக ஒரு செல்போன் செயலியை நவீன்குமார் பதிவிறக்கம் செய்திருந்தார். அந்த செயலி, ஒருவருக்கு பணம் அனுப்பாமலேயே, அனுப்பி வைத்திருப்பது போல, தகவல்களை காட்டுவதாகும்.

இந்த செல்போன் செயலி மூலமாகவே ஏ.டி.எம். மையத்திற்கு சென்று, அங்கு வரும் ஏராளமான வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கிவிட்டு, அவர்களது வங்கி கணக்குக்கு பணம் அனுப்பி வைத்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இன்ஸ்பெக்டரிடம் அறிமுகத்தை ஏற்படுத்தி கொள்ளலாம் என்பதற்காக பரிசு கொடுக்க வந்திருந்ததும் தெரிந்தது. அந்த வாலிபரிடம் இருந்து ரூ.55 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது ராஜராஜேசுவரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com