முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதல்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை தாக்கி பொய் வழக்கு போட்ட சப்-இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் மீது தாக்குதல்: போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கூகையூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி(வயது46)அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். கடந்த மாதம் 5-ந்தேதி இவரது மோட்டார்சைக்கிள் திருட்டு போய்விட்டது. இது சம்பந்தமாக பெரியசாமி கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஆனால் ஒரு மாதம் ஆகியும் அவரது புகார் மனு மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய வில்லை. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி பெரியசாமி கீழ்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலைக்கு போன் செய்து தனது புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்யுங்கள் அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டிடம் செல்லப்போவதாக கூறியுள்ளார். அதனால் அவரை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை கூறி உள்ளார்.

அதன்படி போலீஸ் நிலையத்துக்கு சென்ற பெரியசாமியை சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது..மேலும் பெரியசாமி மீது போலீஸ்நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கும் பதிவு செய்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதில் காயமடைந்த பெரியசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமியை தாக்கி அவர் மீது பொய் வழக்கு போட்ட சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று கூகையூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமியை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு நேரில் பார்த்து ஆறுதல் கூறி போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.அவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அரசு டாக்டர் பழமலையிடம் பிரபு எம்.எல்.ஏ. கூறினார். இதனையடுத்து பிரபு எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனை நேரில் சந்தித்து, பெரியசாமியை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெரியசாமி மீது கீழ்குப்பம் போலீசார் போட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரபு எம்.எல்.ஏ.விடம் உறுதியளித்தார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com