

ஆம்பூர்,
ஆம்பூர் நகராட்சியில் சுங்கம் வசூலிப்பது, சந்தைவரி வசூல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நேற்று நகராட்சி அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. பல ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஏலத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் நகரசபை உறுப்பினர் ஜமில்அஹமது நகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஏலம் எடுக்க உள்ளதாக கூறினார். அப்போது அங்கு இருந்தவர்களுக்கும், ஜமில்அஹமதுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஜமில்அஹமத்துக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் ரெயில்நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் படுத்துக் கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து நகரமாட்டேன் என கூறினார். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்து அவரை சாலையை விட்டு நகருமாறு கூறினர். ஆனால் அவர் மறுத்ததால் அவரை குண்டு கட்டாக போலீசார் தூக்கி அப்புறப்படுத்தி சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து சாலையில் போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.