வேப்பனப்பள்ளியில் சூறைக்காற்றுடன் மழை வீட்டின்மீது மரம் விழுந்ததில் 4 பேர் காயம்

வேப்பனப்பள்ளியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீட்டுக்குள் மரம் விழுந்ததில் 4 பேர் காயம் அடைந்தனர்.
வேப்பனப்பள்ளியில் சூறைக்காற்றுடன் மழை வீட்டின்மீது மரம் விழுந்ததில் 4 பேர் காயம்
Published on

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்தது. நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் திடீரென்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையுடன் சூறைக்காற்று வீசியது. இதில் சிந்தகும்மனப்பள்ளி கிராமத்தில் வேப்பமரம் ஒன்று சூறைக்காற்றால் சாய்ந்து சந்திரன் என்பவரது வீட்டின் மேல் விழுந்ததில் வீட்டில் இருந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பயிர்கள் சேதம்

இதேபோல் அதே கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரது வீட்டின் மேல் மரம் விழுந்ததில் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் சில இடங்களில் வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் சாய்ந்து விழுந்ததில் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பலத்த மழை பெய்ததில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையால் வாழை, தக்காளி போன்ற விளைநிலங்களில் 3 அடிக்கு மேல் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com