

நாகர்கோவில்,
நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் 300-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் வெளியூர்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்திலேயே தனித்தனி விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு மாணவர்களின் ஆடையை களைய செய்து சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பின்னணியில் முன்னாள் மாணவர் ஒருவர் இருந்துள்ளார். ஆனால் கல்லூரி விடுதிக்குள் முன்னாள் மாணவர் எப்படி அத்துமீறி நுழைந்தார்? என்ற விவரம் தெரியவில்லை.
இதைத் தொடர்ந்து ராக்கிங் கொடுமைக்கு ஆளான மாணவர்கள் கல்லூரி டீன் (பொறுப்பு) டாக்டர் நாராயணனிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து ராக்கிங் பற்றி விசாரணை நடத்த டீன் நாராயணன் உத்தரவிட்டார். அதன்பேரில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக சீனியர் மாணவர்கள் 4 பேர் நேற்று அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை டீன் நாராயணன் பிறப்பித்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, முதலாம் ஆண்டு மாணவர்களை ராக்கிங் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட 4 சீனியர் மாணவர்களை 15 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்துள்ளோம். மேலும் ராக்கிங் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த முன்னாள் மாணவர் தொடர்பாகவும், அவர் எதற்காக வந்தார்? என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம் என்றார்.