நான்கு வழிச்சாலைக்காக வழங்கப்படும் நிலத்திற்கான இழப்பீடு தொகை பற்றி தெரிவிக்க வேண்டும்

பொள்ளாச்சி- திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலைக்காக வழங்கப்படும் நிலத்திற்கு இழப்பீடு தொகை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று விசாரணை அதிகாரியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
நான்கு வழிச்சாலைக்காக வழங்கப்படும் நிலத்திற்கான இழப்பீடு தொகை பற்றி தெரிவிக்க வேண்டும்
Published on

உடுமலை,

பொள்ளாச்சி முதல் திண்டுக்கல்வரை (தேசிய நெடுஞ்சாலை எண் 209) நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மொத்த நீளம் 160 கிலோ மீட்டர். இதில் 120 கிலோ மீட்டர் தூரம் புறவழிச்சாலையாக அமைகிறது. இந்த நான்கு வழிச்சாலைக்காக எந்தெந்த இடங்களில் எவ்வளவு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அந்த நிலத்தின் உரிமையாளர் பெயர் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நிலம் எடுப்பு தொடர்பாக பணிகளை மேற்கொள்வதற்காக விசாரணை மற்றும் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான ஆவணங்களை கோரப்பட்டு தேசிய நெடுஞ்சாலை எண். 209 ன் தனி மாவட்ட வருவாய் அலுவலரால் சம்பந்தப்பட்ட 393 விவசாயிகளுக்கு விசாரணை அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல் கட்டமாக இந்த திட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ள கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், சின்னவீரம்பட்டி, பெரிய கோட்டை ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள் நேற்று விசாரணைக்காக உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு வருமாறு 100 விவசாயிகள் அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த விசாரணையை அதிகாரி (நில எடுப்பு-தேசிய நெடுஞ்சாலைத்திட்டம் பொள்ளாச்சி-திண்டுக்கல்) கே.ரமேஷ் நடத்தினார். அப்போது தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் டி.வேலாயுதம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தனித்தனியாக கோரிக்கை மனுவை கொடுத்தனர். அதில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-

பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை எண். 209-க்கு கையகப்படுத்துவதற்கான நிலம், வீடு, கட்டிடங்கள், தொழிற்சாலை, கடைகள், தென்னைமரங்கள், குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பான தகவல்கள் வெளிப்படை தன்மையுடன் தெரிவிக்கப்படவில்லை. மேலும் எதன் அடிப்படையில் இழப்பீடு வழங்க உள்ளர்கள் என்று விரைவில் தெரியப்படுத்த வேண்டும். மேலும் நிலத்திற்கான இழப்பீடு தொகை பற்றி தெரிவிக்க வேண்டும். இந்த தகவல் குறித்து தெரியாத பட்சத்தில் எங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து எந்த ஆவணங்களையும் தங்களிடம் ஒப்படைக்கவோ, உடமைகளை விட்டு வெளியேவோ எங்களை நிர்ப்பந்த படுத்துவது அடிப்படை உரிமையை பறிப்பதாகும்.

இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது நில எடுப்பு தாசில்தார் முத்துராம் உடன் இருந்தார். இந்த விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வருகிற 3-ந் தேதியும் நடக் கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com