

திருச்சி,
திருச்சி பாலக்கரை மாமுண்டிசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரி(வயது 39). இவர் கே.கே.நகர் மகாத்மாகாந்தி தெருவில் நடனப்பள்ளி நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி இரவு ஒரு ஆண் மற்றும் பெண் அவரது அலுவலக அறைக்கு சென்று மகேஷ்வரி மீது மிளகாய்பொடியை தூவினர். பின்னர் அவரது வலது கை மற்றும் விரல்களை கத்தியால் வெட்டி அவரிடம் 12 பவுன் நகைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக மகேஷ்வரி கொடுத்த புகாரின்பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மகேஷ்வரியின் தாய்மாமன் காஜாமலையை சேர்ந்த முருகேசன் என்கிற சிவமுருகேசனை(52) போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆசிரியை மகேஷ்வரியிடம் நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சிவமுருகேசனை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் பாடசாலை தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி(30), பாலாஜியின் மனைவி இளஞ்சியம்(29) மற்றும் ஒரு 18 வயது சிறுமி ஆகியோரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 பவுன் நகைகள், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.