தர்மபுரியில் விவசாயிகள் நிதி திட்டத்தில் மோசடி; பெண் ஊழியர் கைது

விவசாயிகளுக்கான நிதி திட்டத்தில் மோசடி தொடர்பாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஊழியரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரியில் விவசாயிகள் நிதி திட்டத்தில் மோசடி; பெண் ஊழியர் கைது
Published on

தர்மபுரி,

மத்திய அரசின் சார்பில் பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்களை விவசாயிகள் என பட்டியலில் இணைத்து நிதி மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த திட்டத்தில் தற்காலிக களப்பணியாளராக பணிபுரிந்த மீனா (வயது 25) என்பவருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மீனாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த திட்டத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் போலியான பயனாளிகளை சேர்த்து அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதை போல் தங்கள் வங்கி கணக்கில் இந்த திட்ட நிதியை வரவு வைத்து மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக மேலும் 11 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் எத்தனை போலி பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும், இந்த மோசடியில் யார்? யாருக்கு? தொடர்பு உள்ளது என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com