போலி ஆவணம் மூலம் ரூ.4 கோடி கடன் பெற்று மோசடி: 4 பேருக்கு சிறை தண்டனை சென்னை கோர்ட்டு உத்தரவு

போலி ஆவணம் மூலம் ரூ.4 கோடி கடன் பெற்று மோசடி செய்த 4 பேருக்கு சென்னை கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது.
போலி ஆவணம் மூலம் ரூ.4 கோடி கடன் பெற்று மோசடி: 4 பேருக்கு சிறை தண்டனை சென்னை கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை பிராட்வே தம்புசெட்டி தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தை தங்களுக்கு சொந்தமான கட்டிடம் என்று கூறி சென்னை தியாகராயநகரைச் சேர்ந்த முத்துசாமி உள்பட 4 பேர் யூகோ வங்கியில் ரூ.4 கோடி கடன் பெற்றனர். இதன்பின்பு தான், அந்த கட்டிடம் கடன் பெற்றவர்களுக்கு சொந்தமானது இல்லை என்றும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதும் வங்கி நிர்வாகத்துக்கு தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி நிர்வாகம் சி.பி.ஐ. போலீசில் புகார் செய்தது. சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி முத்துசாமி, சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த ஆனந்தன், தாம்பரம் சானட்டோரியத்தைச் சேர்ந்த அழகிரிசாமி, திருச்சி கே.கே.நகரைச் சேர்ந்த விவாகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, முத்துசாமி உள்பட 4 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து முத்துசாமி உள்பட 4 பேரும் சென்னையில் உள்ள 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனு நீதிபதி தனசேகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் வக்கீல் முகமது இப்ராகிம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட முத்துசாமி உள்பட 4 பேருக்கும் கீழ்கோர்ட்டு விதித்த சிறை தண்டனை மற்றும் அபராத தொகையை உறுதி செய்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com