பள்ளி ஆசிரியைகளிடம் நகை வாங்கி மோசடி - முதியவர் கைது

மகள் திருமணத்திற்கு தங்க நகைகள் செய்ய வேண்டும் எனக்கூறி பள்ளி ஆசிரியைகளிடம் நகை வாங்கி மோசடி செய்த முதியவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளி ஆசிரியைகளிடம் நகை வாங்கி மோசடி - முதியவர் கைது
Published on

பெங்களூரு,

பெங்களூரு ஆர்.டி.நகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முதியவரை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர், கே.ஜி.ஹள்ளியை சேர்ந்த அப்துல் காதர் என்ற சலீம்(வயது 60) என்று தெரிந்தது. மேலும் அவர், பெங்களூருவில் உள்ள பள்ளிகளுக்கு செல்வார். அங்கு பணியாற்றும் பள்ளியின் முதல்வர், ஆசிரியைகளை சந்தித்து தான் ஒரு தொழில்அதிபர் என்று கூறி அறிமுகமாகி கொள்வார். பின்னர், தான் இந்த பள்ளியில் முதலில் படித்தேன், தற்போது நான் வசதிப்படைத்தவனாக இருப்பதால் பள்ளியின் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக ஆசிரியைகளிடம் அப்துல் காதர் கூறுவார்.

இதன் காரணமாக அவருடன், ஆசிரியைகள் நன்கு பழகுவார்கள். அதன்பிறகு, அந்த ஆசிரியைகளிடம் நீங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகள் அழகாக உள்ளது, எனது மகளுக்கு திருமணம் முடிவாகி இருக்கிறது, உங்களிடம் இருக்கும் நகைகளை போல எனது மகளுக்கும் செய்து கொடுக்க வேண்டும், அதனால் உங்களது நகைகளை கொடுங்கள், அதுபோல மகளுக்கு நகைகள் செய்து விட்டு திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று அப்துல் காதர் சொல்வார். அதனை நம்பி ஆசிரியைகளும் அப்துல் காதரிடம் நகைகளை கழற்றி கொடுத்து விடுவார்கள்.

அவ்வாறு நகைகளை பெற்று செல்லும் அப்துல் காதர், ஆசிரியைகளிடம் அவர்களது நகைகளை திரும்ப கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டு வந்தார். இதற்கு முன்பு பல்லாரி, விஜயாப்புரா மாவட்டங்களில் தன்னை டாக்டர் என்று கூறியும் அப்துல் காதர் மோசடியில் ஈடுபட்டு இருந்தார்.

பள்ளி ஆசிரியைகளிடம் மோசடியில் ஈடுபட்டதாக ஏற்கனவே எச்.ஏ.எல். சிவாஜி நகர் போலீஸ் நிலையங்களில் அப்துல் காதர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டன. கைதான அப்துல் காதர் மீது ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com